கர்நாடகத்துக்கு எப்போதான் தீர்வு.. குமாரசாமி ஜாதகத்தில் செவ்வாய்க் கிழமை ரகசியம்!

நம்பிக்கை வாக்கெடுப்பு உடனே நடத்தவேண்டும் என்று கர்நாடக ஆளுநர் மாறி மாறி நேரம் கொடுத்துவந்தாலும், குமாரசாமி அதற்கான முயற்சியில் மெத்தனமாக இருப்பதற்குப் பின்னே செவ்வாய்க் கிழமை ரகசியம் இருக்கிறதாம்.


கர்நாடக மாநிலத்தில் கூட்டணிக்கு ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ், ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கூட்டணி ஆட்சிக்கு பெரும்பான்மை குறைந்து, பா.ஜ.க.விற்கு பெரும்பான்மை அதிகரித்துள்ளது. இதையடுத்து கர்நாடகாவில் புதிய ஆட்சிக்கு பா.ஜ.க. முயற்சி எடுத்தது.

இந்த நிலையில், கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்தது. அதற்கு தயார் என்று முதல்வர் குமாரசாமி கூறியிருந்தார். இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நேற்று நடத்த சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவிட்டிருந்தார். அதேசமயம் ஆளுநரை சந்தித்த பாஜக, நம்பிக்கை வாக்கெடுப்பை காலம் கடத்தாமல் நடத்த உத்தரவிடுமாறு வலியுறுத்தியது. 

அதன்படி, நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க உத்தரவிட்டார். ஆனால் நேற்று அவை கூடியதும் ஆளும் தரப்பு எம்.எல்.ஏக்கள் பேசத் தொடங்கினர். இந்த விவாதம் மாலை வரை முடியவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் பா.ஜ.க.வின் கோரிக்கை சபையில் எடுபடவில்லை. இதையடுத்து அவை முடிவுக்கு வந்தது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் வரை அவையை விட்டு வெளியேற மாட்டோம் என்று பாஜக கூறி இரவு முழுவதும் அங்கேயே தங்கிவிட்டது

இந்நிலையில் இன்று மீண்டும் அவை கூடிய நிலையில், விவாதம் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பை வரும் திங்கள் அல்லது செவ்வாய் கிழமை நடத்த வேண்டும், அதுவரை விவாதம் தொடரும் என்று சொன்னார். ஆனால், இன்றே நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கவர்னர் மீண்டும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

அதுசரி, அது என்ன திங்கள், செவ்வாய்? குமாரசாமி ஜாதகப்படி இன்னும் இரண்டு நாட்கள் கண்டம் இருக்கிறதாம். அதனால் எப்படியாவது செவ்வாய் கிழமை வரை இழுக்க நினைக்கிறார். அதன்பிறகு அவருக்கு யோக ஜாதகமாம். அடப்பாவிகளா, ஜோதிடத்துல ஒரு மாநிலமே தள்ளாடுதே...