பெண் எப்போது தாயாகிறாள்? அழகாகிறாள்? தெய்வமாகிறாள்?

ஒரு பெண் இந்த உலக நாடக மேடையில் எந்த கதாப்பாத்திரத்தில் மிகவும் அழகாக ஜொலிக்கிறாள்? மகள், சகோதரி, மனைவி, மருமகள், அண்ணி, அத்தை,அம்மா, சித்தி, பெரியம்மா, பாட்டிம்மா என்று விதவிதமான பாத்திரங்களை ஏற்றாலும் தாயும், தாரமுமே பொதுவாக அதிகம் பேசப்படுகிறது.


ஒரு தாயின் வாழ்வும், செயல்களும் வருணிக்க வார்த்தைகளற்றது! குழந்தை உண்டானதிலிருந்து உணவு, உறக்கம் தொலைத்து பின் எங்கே மீள்வது இந்த குழந்தை என்னும் இன்பக் கடலில் மூழ்கி உருகி உருகி குழந்தை மீது பாசமழை பொழியும் ஒரு தாய் என்பவள் எப்படிப்பட்ட கதாப்பாத்திரம் என்பதை சொல்லி விளக்க வரிகளே இல்லை!

வாய் வழி கூறாமலே உணர்வுகளைப் புரிதல் என்பது தாய்மையிலும் உண்மையான காதலிலும் மட்டுமே சாத்தியம்! ஆனாலும் தாய் என்பவள் தன்னுள் உருவாகிய தன் இரத்தம் கொண்டு உருவான குழந்தையிடம் பாசம் வைத்தல் என்பது ஒரு பெரிய அதிசயமோ அல்லது அந்தக் குழந்தைக்காக விட்டுக்கொடுக்கும் விஷயங்கள் ஒரு தியாகமோ அல்ல! தாய்மையை தியாகம் என்று சொல்லி தாய்மையின் மதிப்பைக் குறைக்க விரும்பவில்லை! இது அவள் கடமை, உரிமை! அவள் இரத்தம் அவள் கொடுத்த உயிர் அவள் அதைப் பேணுகிறாள்! பாசம் காட்டி, பரிவுடன் வளர்க்கிறாள்!

அது ஒரு தவம்! ஒரு ஆனந்தப் பரவச நிலை! தன் குழந்தையே தன் உலகம் என்று வாழும் தாய் அந்தக் குழந்தையின் வாழ்வில் ஒரு அழகான தெய்வமாகவே இருக்கிறாள்!

ஒரு தாயாக பெண் மிகவும் அழகாக ஜொலிக்கிறாள்! வாழும் தெய்வமாகிறாள்!

அன்பு செய் வாழும் வரை!

அன்பு செய் பிறர் வாழுவதற்கும்!

அன்பு செய் தன்னலம் இன்றி!

அன்பு செய் எதிர்ப்பார்ப்பின்றி!

இப்படி அன்பினை அள்ளி அள்ளி வழங்கும் அன்பு சுரபி பெண் என்பதை பெண்கள் தான் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்! அன்பினால் ஒரு சிறந்த சமுதாயத்தையே உருவாக்கும் ஆற்றல் படைத்த சக்தி பெண்!