ஸ்டெர்லைட் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்துவது தப்பா? போலீஸ் அடாவடி! கொந்தளிக்கும் தமிழர்கள்!

ஸ்டெர்லைட் போராளிகள் சுட்டுக்கொல்லப்பட்ட இன்றைய தினத்தில், யாரும் அந்த விவகாரத்தைக் கிளறிவிடக் கூடாது என்பதில் போலீஸ் மிகவும் தீவிரமாக இருக்கிறது.


எந்த ஒரு கூட்டம் என்றாலும் 50 பேருக்கு மேல் சேரக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்திருக்கிறார்கள்.  இந்த நிலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்நோலின் வீட்டுக்கு அஞ்சலி செலுத்தக் கிளம்பிய சுப.உதயகுமாரனை, நாகர்கோவில் வீட்டிலே வைத்து போலீஸ் கைது செய்திருக்கிறது.

இவரைப் போலவே பச்சைத் தமிழகம் கட்சியின் குமரி மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியனையும் போலீஸ் கைது செய்திருக்கிறது. ஒவ்வொரு கட்சியில் இருந்தும் அஞ்சலி கூட்டம் கேட்கப்பட்டது. எல்லோரும் தனித்தனியே நடத்தவேண்டாம், ஒன்றுக்குள் ஒன்றாக நடத்துங்கள், 250 பேர் வரை அனுமதிக்கிறோம், என்று அஞ்சலிக் கூட்டம் நடத்த வந்தவர்களை எல்லாம் மிரட்டியிருக்கிறது போலீஸ். இதுதவிர, இந்த வகையில் அஞ்சலி கூட்டம் நடத்துபவர்கள் யார், அதில் யாரெல்லாம் கலந்துகொள்கிறார்கள் என்று குறிப்பு எடுக்கப் போகிறோம் என்பதையும் போலீஸ் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறது.

ஆனாலும், தூத்துக்குடியில் இன்று மெகா மௌனம் நிலவியது. போராளிகளின் நினைவில் ஊர் மயங்கி நிற்கிறது. மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை இயங்கிவிடக் கூடாது என்பது இன்றைய மக்கள் மனநிலையில் தெளிவாகத் தெரிய வந்திருக்கிறது. இன்று இன உணர்வாளர்கள் பலரும் மரணித்த போராளிகள் வீடுகளுக்குச் சென்றும் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். 

ஸ்டெர்லைட் போரில் கொல்லப்பட்ட ஜான்சியின் கல்லறையில் இடம் பெற்றுள்ள இந்த வாசகம் அனைவரது நெஞ்சிலும் நிறைந்திருக்கிறது. அந்த வாசகம், ‘நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். ஓட்டத்தை முடித்து விட்டேன். விசுவாசத்தை காத்துக் கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே’ என்று எழுதப்பட்டுள்ளது.