குமுதம் நிர்வாகம் அடுத்து என்னவாகும்..? பிரபல பத்திரிகையாளர் கருத்து

குமுதம் நிர்வாகத்தைக் கைப்பற்றுவதில் ஜவஹர் மற்றும் வரதராஜனுக்கும் இடையில் நடந்துவந்த கோர்ட் மோதல், ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. இது குறித்து பிரபல பத்திரிகையாளர் கதிர்வேல் வெளியிட்டுள்ள பதிவு இது.


குமுதம் கேஸ்ல கம்பெனி லா ட்ரிபியூனல் தீர்ப்பு வந்தாச்சு. ஒரிஜினல் ஓனர் எஸ்.ஏ.பி என்கிற அண்ணாமலை செட்டியாரோட மகன் ஜவகர் பழனியப்பன் ஜெயிச்சிட்டார்.

அவருக்கும் அவங்க அம்மா கோதை ஆச்சிக்கும் சாதகமான தீர்ப்பு வந்திருக்கு. ரெண்டு பேரையும் ஓரங்கட்ட அண்ணாமலை செட்டியாரோட ஆத்ம நண்பர் பார்த்தசாரதி அய்யங்காரின் மகன் வரதராஜன் எடுத்த எல்லா நடவடிக்கைகளையும் ரத்து பண்ணிருக்கு ட்ரிபியூனல்.

இது இப்படிதான் வரும்னு அநேகம் பேருக்கு தெரியும். வரதராஜனுக்கும் தெரிஞ்சிருக்கலாம். நம்ம நீதி பரிபாலன அமைப்புகள் மேல உள்ள நம்பிக்கைலயும், அமெரிக்கால பிசியான டாக்டரா இருந்துகிட்டு எவ்ள நாளைக்கு ஜவகர் கேஸ் நடத்திர போறார்ங்ற அலட்சியத்லயும் அவர் பிடிவாதமா இருந்திருக்கலாம்.

செட்டிநாட்டு கோடீஸ்வர தொழிலதிபர் குடும்பங்கள் வரிசையா சிக்கல்ல மாட்டிட்டு இருந்ததால சிதம்பரம் மாதிரி ஆளுங்க செல்வாக்க பயன்படுத்த முடியாத சூழல். அதுல இந்து என். ராம் ரொம்பவே மெனக்கிட்டார். ஒரு அய்யங்கார் இன்னோர் அய்யங்காருக்கு எதிரா போலாமோ?னு கேட்டவங்கள மொறச்சு பாத்தே வெரட்டிட்டார்.

எஸ்ஏபிக்கும் பார்த்தசாரதிக்கும் இருந்த ரிலேஷன்ஷிப் ஷோலே படத்துல அமிதாப் தர்மேந்ரா ஃப்ரண்ஷிப் மாதிரினு சொல்லுவாங்க. சொத்து வந்தா சுற்றமே பகை ஆகும்போது நட்புக்கு சோதனை வராம இருக்குமா. 

என்னதான் ஒரு ஊழியர் உயிர குடுத்து உழைச்சு கம்பெனிய மேல்நிலைக்கு கொண்டு வந்தாலும் பணம் போட்ட முதலாளிக்கு சமமா பங்கு கேக்க முடியாது. தொடங்கும்போதே அப்படி ஒப்பந்தம் எழுதி கையெழுத்து போட்டிருந்தால் தவிர. 

மொத்த கம்பெனியவும் கைக்குள்ள கொண்டுவர வரதராஜன் என்ன எல்லாம் செய்தார்னு ஜவகர் பெரிய லிஸ்ட் வச்சிருக்கார். அத குடுங்க போட்றோம்னு சில மீடியா அதிபர்கள் கேட்டப்ப, சிரிச்சுகிட்டே வேண்டாம்னு மறுத்திட்டாரு. அந்த பெருந்தன்மைய வரதராஜன் புரிஞ்சுகிட்டா கசப்பு எல்லாத்தையும் கழுவிட்டு புதுசா ஒரு முயற்சிய தொடங்கலாம். 

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும்னு வாத்யார் அடிக்கடி சொல்லுவார். நடந்திருக்கு.