ஆதரவாளர்களுடன் இசக்கி சுப்பையா ஆலோசனை! தினகரன் கட்சி ஆபிஸ் பறிபோகிறது!

தினகரனின் நக்கலான பேச்சுக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் உண்டு. என்னமா பேசுறாருப்பா என்று கை தட்டுவார்கள், பாராட்டுவார்கள், ஆனால் ஓட்டு மட்டும் போட மட்டார்கள்.


ஆனால், இப்போது அப்படி பேசிய பேச்சுக்காக கோபித்துக்கொள்கிறார்கள், அவரது கட்சி நிர்வாகிகள். நடந்தது இதுதான். நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை தினகரனுக்குப் பின்னே நின்றவர்கள் முழுக்க முழுக்க அவரது ஜாதியைச் சேர்ந்தவர்கள்தான். தினகரன் ரொம்பப் பெரிய ஆளாக வருவார் என்று நம்பிக்கையில் அவருடன் சேர்ந்தார்கள்.

ஆனால், பத்து பைசாவுக்குக்கூட ஆகாத வெத்துவேட்டு தினகரன் என்பதை உணர்ந்துகொண்டார்கள். இந்த நிலையில் தினகரன் கூட்டத்துக்கு வந்த நெல்லை ஜாதிக்காரர்கள், தினகரனை சந்தித்து ரொம்பவும் பெருந்தன்மையுடன் தோல்விக்காக வருந்தி, ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள். அவர்களிடம் பேசிய தினகரன், ‘‘நீங்க என்னைப் பார்த்து பரிதாபப்பட வேண்டாம். எனக்குத்தான் உங்களைப் பார்க்க பரிதாபமா இருக்கு.

ஏதோ எல்லோரும் நம்ம ஜாதியா இருக்கீங்களேன்னுதான் பதவி கொடுத்தேன், ஆனா, நீங்க விசுவாசமா இல்லை’’ என்ற ரீதியில் எக்குத்தப்பாகப் பேசியிருக்கிறார். அதற்கு சில நிர்வாகிகள், ‘‘இல்லேண்ணே... நம்ம ஜாதி ஓட்டு மட்டும்தான் விழுந்திருக்கு’’ என்று பேச, அதற்கும் திட்டு விழுந்திருக்கிறது.

அதனால்தான் நெல்லையில் இருந்து பலரும் ஓடினார்கள். பாப்புலர் முத்தையா, மைக்கேல் ராயப்பன் போன்றவர்கள் ஓடிப் போனார்கள். நேற்று, இசக்கி சுப்பையா குற்றாலத்தில் 200 ஆதரவாளர்களுடன் பேசியதுதான் இப்போது தினகரனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. மற்றவர்கள் போனபோது கண்டுகொள்ளாத தினகரன் இசக்கி சுப்பையா போனால் மட்டும் ஏன் அலற வேண்டும்?

காரணம் இருக்கிறது. சென்னையில் தினகரன் கட்சியின் ஆபிஸ் இருப்பதே இசக்கி சுப்பையாவின் கட்டிடத்தில்தான். அவர் கட்சி மாறினால், தொடர்ந்து கட்சி அலுவலகம் நடத்த முடியுமா என்று தெரியாமல்தான் விழிக்கிறாராம் தினகரன்.

மூணு மாசம் நோட்டீஸ் குடுங்க இசக்கி.