கொரோனாவுக்குப் பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும்? நீங்கள் கற்பனை கூட செய்திராத வரப்போகும் மாற்றங்கள்

இனி கொரோனாவோடு சேர்ந்து வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்


கொரோனா அழிவைத் தடுக்க முடியும் என்றோ, அதை முற்றிலுமாக அகற்றி விட முடியும் என்றோ நவீன வைத்தியம் எந்தவித உறுதிப்பாட்டையும் கொடுக்க முடியாத நிலைமையில் இருக்கின்றது. அப்படியென்றால் எதிர்காலம் எப்படி இருக்கும், அதற்கு எப்படி தயாராக வேண்டும் என்று சொல்கிறார், டாக்டர்.ஜே.பால்பாஸ்கர். இவர் நிதிஆயோக் நிலைக்குழு உறுப்பினர்.

இப்போது யாரையாவது பார்த்தால் இவர்கள் மூலமாக வந்துவிடுமோ, அவர்கள் மூலமாக பரவி விடுமோ என்றெல்லாம் பலரும் பயப்படுகிறார்கள். நாம் யாரைப் பார்த்தாலும், தாமாக விலகி ஓடுகின்ற மனநிலைக்கு மாறிவிட்டோம். 

மருத்துவர்களும் செவிலியர்களும் இந்த தொற்றுக்கு ஆளாகி உயிர் இழக்கக் கூடிய அபாயம் கண்முன் தெரிந்த பொழுது, நமக்கு அச்சத்தை தான் கொடுக்கிறது. அதிலும் குறிப்பாக இதுபோன்ற சூழலில் கிராமப்புற மக்களும், நகர்ப்புறத்தில் இருக்கக்கூடிய ஒரு கணிசமான எண்ணிக்கையிலான மக்களும் பாரம்பரிய மருத்துவ முறையை நோக்கி நகர்கின்ற நிலையை அரசு முற்றிலுமாக தடுக்க முனைந்தது, நமக்கெல்லாம் புரியாத ஒரு விஷயம்.

இதிலும் குறிப்பாகச் சிலரை ‘போலி மருத்துவர்கள்’ என்று குற்றம் சாட்டி கடும் நடவடிக்கை எடுத்தது எல்லாம் சரிதானா என்கிற கேள்வியைச் சிவில் சமூகத்தினரால் கேட்க முடியவில்லை என்றெல்லாம் கூடப் பேசினார்கள்.

அதைப் போலவே குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் அதிகமாகப் பேசினார்கள் என்று ஒரு குற்றச்சாட்டையும் முன்வைத்தார்கள். இதில் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சாதாரண மக்களைப் பொறுத்த வரையிலே வைத்தியத்தில் இந்த முறை, அந்த முறை என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. எதிலிருந்து நிவாரணம் கிடைக்கின்றதோ, எது அவர்களுடைய செலவுகளுக்குக் கட்டுப்படியாகுமோ அதைப் பார்த்தே வைத்தியம் செய்து கொள்வது அவருடைய அடிப்படை உரிமையாக இருக்கிறது.

எப்பொழுது அரசின் கட்டுப்பாட்டில் முழுமையாக சுகாதாரத்துறை செயல்படுகின்றதோ, லாப நோக்கம் கொண்ட நிறுவனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு அல்லது கட்டுப்படுத்தப்பட்டு தரமான மருத்துவ சேவை எல்லோருக்குமே கிடைக்கின்றதோ, அப்பொழுது தான் இதைப் பற்றியெல்லாம் நாம் ஆரோக்கியமாக சிந்தித்துப் பேசிக் கொண்டிருக்க முடியும். அதற்கான அவகாசத்தைப் பருவ காலம் நமக்குத் தரவில்லை.

ஆகவேதான் வீடுகளிலிருந்து பணியாற்றி கொள்வோம். அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டாம் என்ற ஒரு நிலையை பல நிறுவனங்களும் மேற்கொண்டதை நாம் பார்க்கின்றோம்.

வீடுகளில் சென்று பணியாற்றுவது பற்றிக் குறிப்பிட வேண்டுமென்றால், அது கண்டிப்பாக வீடாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எங்கிருந்து வேண்டுமானாலும் பணியாற்றலாம். வலைத்தள இணைப்புகளை மட்டும் சரியாக வைத்துக்கொண்டால் போதும். அது 12 மாதங்களாக இருந்தாலும் சரி, அல்லது 24 மாதங்களாக இருந்தாலும் சரி, அந்தப் பணியை இருக்கின்ற இடத்திலேயே செய்ய முடியுமானால், அதுவே மிகப்பெரிய ஒரு வரமாக இருக்கும்.

இன்றைய சூழலில் கூட்டங்களை, கலந்துரையாடல்களை ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலமாக நடத்திக்கொண்டு அதன்மூலமாக பணியை முடித்துக்கொண்டு இருக்கின்ற சூழல் தானிருக்கிறது.

வீடு அல்லது உங்களுக்கு நம்பிக்கையாக இருக்கின்ற இடங்களில் இருந்து பணியாற்றுங்கள் என்று சொல்கின்ற பொழுது, அதை மனமுவந்து ஏற்றுக்கொண்ட மக்கள் நாளடைவில் அதனுடைய சிரமத்தை மிகக்கடுமையாக உணர ஆரம்பித்தார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இண்டர்நெட் இணைப்பு முக்கியமான ஒரு பிரச்சினை. வீட்டுச்சூழல் என்பது ஓய்வுக்கான இடமாக, உறவுதேடுகின்ற ஒரு இடமாக இருக்கின்ற சூழலில் அதை அலுவலகமாக மாற்றுவது என்பது அவ்வளவு சுலபமான காரியமாக பெரும்பாலானோருக்கு இல்லை.

எனவேதான் எடுத்துக் கொண்ட பணியை உரிய நேரத்தில் முடிக்க இயலாமல், மன அழுத்தத்திற்கும், பணிச்சுமை அழுத்தத்திற்கும் ஆளாகின்றார்கள்.

அதிலும் குறிப்பாக வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு குழந்தைகளையும் பராமரித்துக் கொண்டு, முதியவர்களையும் பார்த்துக் கொண்டிருக்க கூடிய பெண்கள் பணி செய்கின்ற சூழலில் அவர்களுடைய நிலைமையானது மிக மோசமாக இருக்கிறது.

பல வீடுகளில் முழுக் குடும்பத்திற்கும் ஒரே ஒரு கணினி, ஒரே ஒரு தொலைபேசி இணைப்பு, ஒரே ஒரு மோடமும் பயன்பாட்டில் இருப்பதும் உண்டு. அவற்றைப் புதிதாக வாங்குவதற்கும் வாய்ப்பில்லாத ஒரு சூழ்நிலையையும் நாம் இப்பொழுது பார்த்தோம்.

.ஒருவருடைய பணியை, ஆன்லைனில் எப்படி அவர்கள் செயல்படுகிறார்கள் என்பதை வைத்துப் பார்க்கின்ற பொழுது, பல நேரங்களில் மேல்நிலையில் சிறப்பாக பணியாற்றிய ஒருவர் கூட, ஆன்லைன் மூலம் செயல்படுகின்ற பொழுது அவர்கள் குறைவான திறனை வெளிப்படுத்துவதைப் பார்க்க முடிகின்றது.

குறிப்பாக ஆசிரியர் பணியில் இருப்பவர்கள். அவர்கள் நேரடியாக மாணவர்களிடம் பேசுகின்ற பொழுது இருக்கக்கூடிய ஒரு உயிரோட்டம், அவர்கள் வீடியோ கான்பிரன்ஸ் வழியாகவோ அல்லது வேறு வடிவங்களில் அவருடைய பாடங்களை எல்லாம் நடத்துகின்ற பொழுது, அவர்கள் திறமையானவர்கள் தானா என்பதிலே பல நிறுவனங்கள் அவர்கள் மீது சந்தேகம் கொள்வது தவிர்க்க முடியாததாக இருக்கின்றது.

அதேபோல கணக்கு சார்ந்த துறைகளில் பணியாற்றுபவர்கள் தொலைபேசியில் வருகின்ற செய்திகளை வைத்துக் கொண்டும் அல்லது நேரடியாக ஆவணங்களை சரி பார்க்க இயலாமல், தருகின்ற விவரங்களை பூர்த்தி செய்து வேலையை முடிகின்ற பொழுது அதில் தவறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை ஏராளமாக எதிர் கொள்கின்றார்கள்.

பலர் வீட்டிலிருந்தே பணியாற்றிக் கொண்டிருப்பதில் இப்படிப்பட்ட சிரமங்கள் ஒருபுறம் என்றால், இருக்கிற வேலைகளை இழந்து, வெறுமையுடன் வீடுகளில் இருப்பவர்களும் அதிகப்பட்டிருக்கிறார்கள். கொரோனா பல வீடுகளில் வெவ்வேறு சலனங்களைத் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. பொருளாதாரம் சரியாகி, நோய்த் தொற்று குறைந்து, குடும்பங்களில் குறைந்தபட்ச நிம்மதி எப்போது உருவாகும் என்று கேள்விதான் எழுப்ப முடிகிறது.