சீன அதிபர் வரவினால் இந்தியாவுக்கு என்ன லாபம்? மோடி சாதித்தாரா அல்லது சறுக்கினாரா?

பிரதமர் மோடி கடந்தமுறை சீனாவுக்குப் போன நேரத்தில், அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களைப் பார்க்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.


 அதனாலே, இந்தியாவிலும் அப்படிப்பட்ட இடங்கள் உள்ளன என்பதைக் காட்டும் வகையில் இந்தப் பயணம் வடிவமைக்கப்பட்டது. இந்த சந்திப்பு அரசு முறையிலான முறைசாரா சந்திப்பு என்பதால், தலைவர்கள் இருவரும் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுவார்கள். அவர்கள் என்ன பேசினார்கள், என்ன திட்டமிட்டார்கள் என்பதை அறிக்கையாகக் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.

இன்னும் சொல்லப்போனால், நேரக் கட்டுப்பாடு, அதிகாரிகள் தலையீடு போன்ற எதுவுமே இருக்காது. சரி, இதனால் இந்தியாவுக்கு என்ன லாபம்? நிறையவே லாபம் இருக்கிறது. இப்போது உலகத்தில் கவனிக்கத்தக்க பெரும் மக்கள்தொகை கொண்ட நாடுகள் சீனாவும், இந்தியாவும்தான். உண்மையை சொல்வது என்றால், அடுத்த வல்லரசு என்று மார் தட்டிக்கொள்ள தகுதியானது இந்த இரண்டு நாடுகள் மட்டும்தான். 

இந்தியாவும் சீனாவும் நட்பு நாடுகளாகிவிட்டால் இரண்டு நன்மை உண்டு. ஒன்று அமெரிக்கா இந்தியாவின் மீது இஷ்டத்துக்கு இனி கட்டுப்பாடு விதிக்க முடியாது. பாகிஸ்தான் அளவுக்கு மீறி வாலாட்டாது. இதைத்தாண்டி இரண்டு நாடுகளையும் சுற்றியுள்ள குட்டி நாடுகள் எல்லாமே அடங்கி நடக்கும். 

ரஷ்யாவை முழுக்க முழுக்க சீனா பக்கம் சாயவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. மேலும், தெற்காசிய நாடுகளான மியான்மார், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளுடன் உறவை மேம்படுத்தி முழுக்க முழுக்க சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கவும் இந்த மீட்டிங் அவசியம்.  

இவை எல்லாவற்றையும்விட, இந்தியா என்றால் வெளிநாடுகளில் இன்னமும் ஏழ்மை நாடு என்ற எண்ணம் இருக்கிறது. அதனை அழிக்கும் வகையில் இந்திய பிரதமர் சீன அதிபர் சந்திப்பு உலகம் முழுவதும் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் புராதன கலைச்சின்னங்களுடன் நவீனமும் கலந்துள்ளது என்பதை உலகம் புரிந்துகொண்டுள்ளது. அதனால் அடுத்த ஆண்டு மாமல்லபுரத்துக்கு வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை இரண்டு மடங்குக்கு மேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.