நவம்பர் 27, காயத்திரி ரகுராமை என்ன செய்வார்கள் திருமாவின் தம்பிகள்?

இந்துக் கோயில்களை அசிங்கம் என்று திருமாவளவன் பேசிய விவகாரம் எங்கெங்கோ சுற்றி, இப்போது நடிகை காயத்திரி ரகுராமை மையம் கொண்ட புயலாக சுற்றிவருகிறது.


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் கோயில் சிலைகள் குறித்து அசிங்கமாகப் பேசியதையும், அதற்கு ஆதரவாக பா.ஜ.க.வின் ஐ.டி. டீம் வெளியிட்ட ஒரு வீடியோவையும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்த காய்த்திரி ரகுராம், இந்துக்கள் இவரை செருப்பால் அடிக்கவேண்டும் என்ற அர்த்தம் வரும் வகையில் பதிவு ஒன்று போட்டிருந்தார்.

இந்த விவகாரத்தையடுத்து திருமாவளவனின் சிறுத்தைகள் காயத்திரியை கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்தனர். அதுகுறித்துப் பேசிய காயத்திரி, ‘திருமாவளவன் என்னுடைய எண்ணை எல்லோருக்கும் பகிருந்து விமர்சிக்கச் சொல்கிறார்’ என்று மேலும் குற்றம் சாட்டினார்.

இதன்பிறகு மேலும் எதிர்ப்பு வலுத்தது. இந்த நிலையில், திருமாவளவனின் ஆட்கள் தன்னை மிரட்டுவதாகக் கூறியவர், ‘நவம்பர் 27ஆம் தேதி காலை பத்து மணிக்கு மெரினா கடற்கரைக்கு வருகிறேன். திருமாவளவனுக்கு தைரியம் இருந்தால் அங்கே வந்து இந்துக்களைப் பற்றித் தவறாகப் பேசட்டும்’ எனக் கூறியிருந்தார்.

மீண்டும் மீண்டும் காயத்திரி சீண்டுவதைக் கண்டு டென்ஷன் ஆன திரும்வாவளவனின் ஆதரவாளர்கள் இன்று காயத்திரி ரகுராம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். காயத்ரி ரகுராம் தற்போது சென்னையில் இல்லை என்றாலும், வீட்டை முற்றுகையிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். 

நவம்பர் 27ம் தேதி காயத்திரி அழைத்தபடி திருமாவளவன் பீச்சுக்குப் போவாரா என்பதுதான் கேள்வி. யார் யாரையோ எதிர்த்துப் போராடிய கட்சி இப்போது காயத்திரியை எதிர்க்கும் அளவுக்கு வந்திருப்பது, மாற்றமா வளர்ச்சியா என்பதை திருமாவளவன்தான் சொல்ல வேண்டும்.