ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் என்னதான் சொல்கிறார்? ஏன் மோடி ரகுராமை அலட்சியப்படுத்துகிறார்?

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பொருளாதார மேதையாக கொண்டாடப்பட்ட ரகுராம் ராஜனுக்கு இந்த அரசு, ஆரம்பத்தில் இருந்தே மதிப்பும், மரியாதையும் கொடுக்கவில்லை.


அதனால் பதவியில் இருந்து வெளியேறினார். இப்போது இந்தியாவில் பொருளாதார மந்த நிலை நிலவும் நிலையில், இதனை எப்படி சரிசெய்வது என்று கூறியிருக்கிறார் ரகுராம் ராஜன்.  அவர் என்ன சொல்கிறார் தெரியுமா? இந்த பொருளாதாரத்தில் ஆழ்ந்த சோர்வு காணப்படுகிறது என்ற உண்மையை, யதார்த்தத்தை பிரதமரும், அரசும் நேரடியாக ஒப்புக் கொள்ளாமல் அரசியல் உள் நோக்கம் கற்பிக்கக்கூடாது.

பிரதமர் அலுவலகத்தில் அதிகாரம் குவிந்து கிடக்கிறது. முடிவு எடுப்பது மட்டுமின்றி, யோசனை, திட்டங்கள் ஆகியவை பிரதமரை சுற்றியும், பிரதமர் அலுவலகத்திலும் இருக்கிற தனி நபர்களிடம் இருந்தே வருகிறது. மந்திரிகள் அதிகாரமற்றவர்களாக உள்ளார்கள் என்கிறார் ரகுராம் ராஜன்!

மேலும் அவர், ‘2024ம் ஆண்டு 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பொருளாதாரத்தை எட்டுவோம் என்று மத்திய அரசு சொல்லிவருகிறது. அப்படியென்றால், ஆண்டுக்கு 8 முதல் 9% வளர்ச்சியை நோக்கி நகரவேண்டும். ஆனால், இப்போதைய சூழலில் அதற்கு வாய்ப்பு இருப்பதாக்த் தெரியவில்லை.

கட்டுமானம், ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகள் ஆழ்ந்த சிக்கலில் இருக்கின்றன. வேலையின்மை அதிகரித்து வருகிறது. அதனால் நிலம் கையகப்படுத்தலை சீர்திருத்துதல், தொழிலாளர் சட்டம், நிலையான வரிச்சட்டம் மற்றும் மின் கட்டணம், தொலைதொடர்புத் துறை ஆகியவற்றில் சீர்திருத்தம் தேவை என்கிறார்.

ஆனால், இந்த விஷயங்கள் பிரதமர் பார்வைக்கும், அமைச்சர்கள் பார்வைக்கும் செல்லவில்லை என்கிறார். மந்திரிகளுக்கே அதிகாரம் மறுக்கப்படுகிறது என்றால், ஆட்சி நிர்வாகத்தில் அதிகார பரவல் இல்லை என்பது தெரியவருகிறது .மேலும் பிரதமர் அலுவலகத்தில் உள்ள தனி நபர்கள் தான் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றால்...,பிரதமரே ஒரு பொம்மையாக ஆட்டுவிக்கப்படுகிறாரா...? என்ற சந்தேகமும் வலுக்கிறது.

என்ன செய்யப்போகிறார் மோடி..?