எடப்பாடியாரும், மோடியும் என்னதான் செய்கிறார்கள்? மிசா ஸ்டாலினைப் பார்க்க பரிதாபமா இருக்குதே!

அண்ணா அறிவாலயம் இருக்குமிடம் பஞ்சமி நிலம் என்றும், ஸ்டாலின் அவசரநிலை காலத்தில் சிறையில் இருக்கவில்லை என்றும் மீண்டும் மீண்டும் தி.மு.க. மீது கடுமையாக விமர்சனம் செய்யப்படுகிறது.


இதில் வேடிக்கை என்னவெனில் குற்றம் சாட்டப்பட்டுவிட்டதால், இல்லையென்று திமுகதான் நிரூபிக்க வேண்டும் என்கிறார்கள். இன்று ஆட்சியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியும், மோடியும் கை அசைத்தால் அடுத்த நொடியே அத்தனை ஆதாரமும் கொட்டிவிடுமே. ஏன் செய்யாமல் அமைதியாக இருக்கிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறி? 

வட்டாட்சியர், கிராம நிர்வாக அதிகாரி சார் பதிவாளர் அலுவலகம் அகியவற்றில் சாதாரணமாகத் தேடினாலே ஒரு நிலம் பஞ்சமி நிலமா இல்லையா என்பது தெரிந்து விடும். ஏராளமான செயல்பாட்டாளர்களும், என்.ஜி.ஓக்களும் தினமும் செய்துவருவதுதான் இது. 

அதேபோலத்தான் ஸ்டாலின் கைதும். சிறை ஆவணங்கள், நீதிமன்ற ஆவணங்கள், காவல்நிலைய ஆவணங்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று இன்னும் தப்பியிருக்க கட்டாயம் வாய்ப்பிருக்கிறது. கூடவே தியாகு போன்றவர்களும் ஸ்டாலினோடு சிறையிலிருந்ததாக எழுதியிருக்கிறார்கள். அவர்களோடு ஒரு பேட்டி, ஒரு தகவல் பெறும் உரிமைச் சட்ட மனு, அக்காலச் செய்தித் தாள்கள் ஆகியவை போதும்.

இதையெல்லாம் தி.மு.க.வும் செய்யலாம். ஆனால் எப்போதும் போலவே தி.மு.க. குற்றச் சாட்டுகளை எதிர்கொள்வதில் பலவீனமாக இருக்கிறது. தி.மு.க.விடம் ஆதாரம் இருக்கிறதோ இல்லையோ இதைவைத்து விளையாடுவதை கொஞ்சம் நிறுத்துங்கப்பா..!