உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகின்றன? எடப்பாடிக்குத் தோல்வி என்றால் நகராட்சி, மாநகராட்சி தேர்தல் நடக்குமா?

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இதுவரையிலும் அ.தி.மு.க. அணியினருக்கும், தி.மு.க. அணியினருக்கும் கிட்டத்தட்ட சரிபாதியாக பிரிந்து காணப்படுகிறது. இது, யாருக்கு வெற்றி, யாருக்குத் தோல்வி என்பதில் ஏகப்பட்ட கணக்குகள் ஓடுகின்றன.


அதாவது தி.மு.க. கூட்டணியிலும், அ.தி.மு.க. கூட்டணியிலும், இந்தத் தேர்தலை முன்னின்று நடத்தியது மாவட்டச் செயலாளர்கள்தான். கூட்டணிக் கட்சிகளை கதறவிட்டதில் தி.மு.க.வை விட அ.தி.மு.க. பங்குதான் அதிகம். அதனால்தான் அன்புமணி டென்ஷனில் தனியே நிற்கலாமா என்ற அளவுக்குப் பேசினார்.

இப்போது மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களில் அ.தி.மு.க.வை விட தி.மு.க. முந்திக்கொண்டு வந்ததில் அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால், தி.மு.க.வைவிட அ.தி.மு.க.வினர் இரண்டு மடங்கு பணம் செலவழித்துள்ளனர். இந்த வாக்குகள் கிட்டத்தட்ட சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாகவே கருதப்படுகிறது.

இப்போது வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், அந்தந்த கட்சியின் வெற்றிக்குப் பாடுபடுவார்கள் என்று உறுதியாக சொல்ல முடியும். அதனால் பணம் செலவழித்தும் தோல்வி அடைந்திருப்பது எடப்பாடியாருக்கு பெரும் சிக்கலாகத்தான் கருதப்படுகிறது. இத்தனைக்கும் இந்தத் தேர்தலில் முழுக்க முழுக்க எடப்பாடியாரின் ஆட்களே அதிகன் நின்றார்கள். 

பன்னீரின் ஆட்களுக்கு தேவையான சீட் கிடைக்கவில்லை என்றாலும், யாரும் போட்டி வேட்பாளர்களாக நிற்கவில்லை. இந்த சூழலில், அடுத்து மீதமுள்ள 9 மாவட்ட ஊராட்சித் தேர்தல், பேரூராட்சித் தேர்தல், நகராட்சித் தேர்தல், மாநகராட்சித் தேர்தல் எல்லாம் நடக்குமா என்பது சந்தேகம்தான்.