விஜயகாந்த் சொத்து ஏலத்துக்கு வருகிறது என்ற செய்தி வந்ததும் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
மல்லையாவுக்கும் பிரேமலதாவுக்கும் என்ன வித்தியாசம்? சொத்து இருந்தும் வட்டி கட்ட மாட்டாராம் பிரேமலதா!

ஆனால், கடைசியில் மொத்த கடன் 5 கோடி என்றதும்தான், அவரது கட்சிக்காரர்களே வாய்பொத்தி சிரிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஏனென்றால், ஐந்து கோடி கடனை கட்ட முடியவில்லை என்பதற்கும், கட்ட முடியாது என்று தெனாவெட்டாக இருப்பதற்கும் பெரிய வித்தியாசமிருக்கிறது. விஜயகாந்திற்கும்,அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் தமிழகத்திலும், தமிழகத்திற்கு வெளியிலும் இருக்கும் சொத்துகளின் மதிப்பு எக்கச்சக்கம் என்பது எல்லோருக்கும் தெரியும்.
இன்னும் சொல்லப்போனால் கடந்த 2016 தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் நின்றபோது அவரது சொத்து மதிப்பு என 19 கோடியை கணக்கு காட்டியிருக்கிறார். பிரேமலதாவுக்கு 17 கோடி சொத்து இருப்பதாக கணக்கு காட்டியிருக்கிறார். 2014ம் ஆண்டு தன்னுடைய சொத்துமதிப்பு 33 கோடி என்று கணக்கு காட்டிய சுதீஷ், 2019 தேர்தலில் 60 கோடி என்று கணக்கு காட்டியிருக்கிறார். அதாவது வருமானம் கொட்டுகிறது என்று அர்த்தம்.
இந்த சொத்தில் இருந்து வரும் வருமானத்தை வங்கிக்குக் கொடுக்கலாம். அல்லது ஏதேனும் ஒரு சொத்தை விற்று முழு கடனையும் அடைத்துவிடலாம். ஆனால், அப்படி எதுவும் செய்ய மாட்டாராம் பிரேமலதா. இருக்கிற பணத்தை எடுத்துக் கடனைக் கட்டினால், கட்டப்பட்ட பணத்திற்கு கணக்கு காட்ட முடியாது என்று ஆடிட்டர்கள் சொன்னார்களாம்! அதனால், அண்ணியார், ‘’சரி, கட்ட வேண்டாம்.., நல்லதா போச்சு..இதையும் இமேஜ் பில்டப் பண்ணுவதற்கு பயன்படுத்திக்கலாம். நாம் நேர்மையானவர்கள் என்பதற்கும், கல்வி சேவை செய்து நஷ்டப்பட்டோம் என்பதற்கும் இது ஒரு இலவச விளம்பரமாச்சு.’’ என்று வெளியே பேச்சு உலவுகிறது.
வங்கியில் கடன் வாங்கிவிட்டு அதைக் கட்டாமல் தப்பிக்கப் பார்க்கும் மல்லையாவுக்கும் பிரேமலதாவுக்கும் என்னதான் வித்தியாசம்? மல்லையாவும் நஷ்டம் என்றுதானே சொல்கிறார். இப்போது வட்டி கட்டுவதற்காக அப்பாவி தொண்டர்களிடம் பணம் வசூலிக்காமல் இருந்தால் சரிதான். நம் நாடு இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் கையில் மாட்டியிருப்பதுதான் வேதனையிலும் வேதனை.