டாக்டர்களின் நான்கு அம்ச கோரிக்கை என்னங்க? நிறைவேற்றுவதில் எடப்பாடிக்கு என்ன பிரச்னை?

மருத்துவர்களை தெய்வம் போன்று மதிப்பது தமிழர்களின் பண்பாடு. ஆனால், அந்த மருத்துவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அவமரியாதை செய்துவருகிறது தமிழக அரசு.


 நான்கே நான்கு கோரிக்கைகளுக்காக போராடி வருகிறார்கள் மருத்துவர்கள். அவர்கள் சட்டென்று போராட களத்துக்கு வரவில்லை. அரசுக்குப் போதிய அவகாசம் கொடுத்துதான் இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கடந்த ஆகஸ்டு 27ம் தேதி அரசு மருத்துவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தி ஆறு வாரம் அவகாசம் அளிக்கும்படிக் கேட்டுக்கொண்டார். அமைச்சரின் வாக்குறுதியை நம்பி மருத்துவர்களும் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டனர்.

அந்தக் கெடு அக்டோபர் 9 ம் தேதியோடு முடிவடைந்தது. அதன்பிறகும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரோ, முதலமைச்சரோ கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து கொஞ்சமும் கவலைப்படவில்லை. அதனால் வேறு வழியில்லலமல்தான் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

அவர்களுடைய நான்கு கோரிக்கைகள் இதுதான். முதலாவதாக, தமிழ்நாட்டில் மருத்துவ உயர்கல்விப் படிப்புகளில் அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு. எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலைப் படிப்புகளிலும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளிலும் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு உண்டு.

ஆனால், தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்த 50 சதவிகித இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டு விட்டது. மீண்டும் இந்த விஷயத்தில் இட ஒதுக்கீடு வேண்டும் என்பது முதல் கோரிக்கை.

இரண்டாவதாக, இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவக் கல்லூரிகளுக்கென குறைந்தபட்சத் தேவைகளை நிர்ணயிக்கிறது. இவை பெரும்பாலும் தனியார் கல்லூரிகளில் குறைந்தபட்சத் தகுதியாவது இருக்க வேண்டுமென்பதற்காகக் கொண்டு வரப்பட்டவை.

ஆனால், இந்தக் குறைந்தபட்ச தகுதியை அடிப்படையாக வைத்து, தமிழக அரசும் பல பணியிடங்களை ரத்து செய்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 800 பணி இடங்கள் இவ்வாறு ஒழிக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை நீக்க கோருகிறார்கள்.

தற்போது அரசு மருத்துவர்கள் டைனமிக் அஸ்யூர்டு கேரியர் ப்ரொக்ரெஷன் என்ற விதியின்படி, 20 ஆண்டுகள் பணியை முடித்த பிறகுதான் நான்காம் நிலை மருத்துவ அதிகாரியாக உயர்வு பெற்று, 1.3 லட்சம் ரூபாய் சம்பளத்தை எட்ட முடியும். இளநிலை, முதுநிலை, சிறப்புப் படிப்புகளை முடித்து அரசுப் பணியில் சேரவே கிட்டத்தட்ட 32 வயதாகும் நிலையில், இந்த ஊதியத்தைப் பெறும்போது, 50 வயதைத் தொட்டு விடும் நிலை!

இந்த நான்காம் நிலை மருத்துவ அதிகாரியாக உயர்த்துவதை மத்திய அரசுப் பணிகளில் இருப்பதைப்போல 13 ஆண்டுகளிலேயே செய்ய வேண்டுமெனும் கோரிக்கையும் முக்கியமான மூன்றாவது கோரிக்கை.

நான்காவதாக, பணியில் சேரும் மருத்துவர்களுக்கான நியமனம் குறித்த பிரச்சினை. அரசுப் பணியில் இருப்பதாக உறுதியளித்து முதுநிலை படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள், அந்தப் படிப்பை முடித்த பிறகு சரியான பணியிடங்களில் நியமனம் செய்யாமல், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிப்பை முடித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை நிறுத்த வேண்டும். 

இப்போது மருத்துவர்கள் கையொப்பம் போடாமலேயே அவசர நோயாளிகளுக்கு சிகிச்சை செய்துவருகிறது. இதனை மருத்துவர்களின் பலவீனமாக கருதாமல் முதல்வரே நேரில் அழைத்துப் பேச வேண்டும். செய்வாரா எடப்பாடி?