அன்று ஜார்ஜ் பெர்னான்டஸ், பங்காரு லட்சுமணன், மம்தா! இன்று எடப்பாடி! அதிர வைக்கும் மேத்யூஸ் சாமுவேல் பின்னணி!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து திடீரென பரபரப்பு கிளப்பியிருக்கும் தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் எப்படிப்பட்டவர், அடுத்து அவர் என்ன செய்வார் என்பதுதான் தமிழகத்தில் எழுந்துள்ள பெரும் பரபரப்பு.


கொடநாட்டு கொள்ளையும் அதைத் தொடர்ந்து நடந்த மர்ம மரணங்களுக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் காரணம் என்று டெல்லியில் பேட்டி கொடுத்தார் தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல். அப்போது அவருடன் சேர்ந்து கொள்ளையடிக்கப் போன சயான் மற்றும் மனோஜ் ஆகியோரும் பேட்டி கொடுத்தனர். எடப்பாடி பழனிச்சாமிக்காக சில ஆதாரங்களை எடுக்க வேண்டும் என்பதற்காகவே கொள்ளை நடந்ததாகவும், அதனை ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் உறுதிபட சொன்னதாகவும் தெரிவித்தார்.

ஒரு குற்றவாளி, தான் தப்பிக்கவேண்டும் என்பதற்காக இப்படி எதையேனும் பேசி பரபரப்பைக் கிளப்புவது வழக்கம்தான் என்பதால் தமிழகம் பெரிதாக அதிரவில்லை. ஆனால், எடப்பாடி உடனடியாக பதவி விலகவேண்டும் என்று வழக்கம்போல் எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பவே, தன்னுடைய இரும்புப்பிடியை குற்றவாளிகள் மீது பாய்ச்சியிருக்கிறார் எடப்பாடி. அதன்படி டெல்லிக்குச் சென்ற தமிழக போலீஸ் குற்றவாளிகளான சயன் மற்றும் மனோஜை கைது செய்ததாக அறிவித்துள்ளது.

இதனையடுத்து மீண்டும் வீடியோவில் பொங்கியிருக்கிறார் தெஹல்காவின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல். தி.மு.க.வின் ஸ்டாலின் அல்லது அ.ம.மு.க. தினகரன் ஆகிய யாரேனும் ஒருவருடைய தூண்டுதலில்தான் இந்த டாக்குமெண்ட்ரி தயாரிக்கப்பட்டுள்ளதாக நம்புகிறது ஆளும் அரசு. உண்மையிலே மேத்யூஸ் சாமுவேல் எப்படிப்பட்டவர் என்பதை அவரது கடந்த காலத்தை கொஞ்சம் எட்டிப் பார்க்கலாம்.

ஆரம்பத்தில் தொலைக்காட்சி ஊடகங்களில் நுழைந்தார் மேத்யூஸ். ஆனால், அங்கு தனக்குரிய தனித்தன்மை இல்லை என்பதால் தெஹல்கா பத்திரிகையில் செய்தியாளராகச் சேர்ந்தார். புலனாய்வு பத்திரிகை என்பதால், அந்த வேலை மேத்யூஸ்க்கு சவால் தருவதாக அமைந்தது. கடுமையான உழைப்பின் மூலம் தெஹல்காவின் நிர்வாக ஆசிரியராக உயர்ந்தார்.

பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராகத்தான் மேத்யூஸ் அதிகம் வாள் எடுத்து வீசியிருக்கிறார்.  கடந்த 2001ம் ஆண்டு பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் பங்காரு லஷ்மன் போன்றோர் பதவிக்கு ஆப்பு வைத்தது. பல்வேறு ஊழல்களைக் கொண்டுவந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்காக இந்தப் பணிகளை மேத்யூஸ் செய்கிறார் என்று சொல்லப்பட்டது.

அதன்பிறகு தெஹல்கா  பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாரதா நியூஸ்க்கு மாறினார் மேத்யூஸ். அப்போது அவர் மேற்கொண்ட சாரதா சிட்பண்ட் மோசடி நாடு முழுவதும் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அதன்பிறகும் மம்தாவின் திருணாமூல் கட்சியில் நடந்த பல்வேறு ஊழல்களை அம்பலத்துக்குக் கொண்டுவந்தார். அதனால், மேத்யூஸ்க்குப் பின்னே பா.ஜ.க. இருப்பதாக ஒரு பேச்சு கிளம்பியது.

தான் ஒருபோதும் பா.ஜ.க.வின் கைப்பாவை அல்ல என்பதை உறுதிப்படுத்துவது போன்று ஆதார் முறைகேட்டை அம்பலப்படுத்தினார் மேத்யூஸ். அவர் பெயரில் பல்வேறு ஆதார் அட்டைகளை வாங்கிக்காட்டினார். ஏதேனும் அதிரடியைக் கிளப்பிவிட்டு அவ்வப்போது காணாமல் போவது மேத்யூஸ் ஸ்டைல். அதன்படி இத்தனை நாட்களும் அமைதியாக இருந்தவர் இப்போது திடீரென களத்துக்கு வந்து எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.

இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தீவிர விசாரணைக்கு ஆணையிட்டிருக்கிறார். இந்தக் குற்றச்ச்சாட்டுகளுக்குப் பின்னே ஸ்டாலின் அல்லது தினகரன் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு என்று ஆளும் தரப்பு நினைக்கிறது. இதேபோன்று மேத்யூஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன என்றாலும் இதுவரை அவர் மீது எதுவும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டதில்லை. அதனால் அவர் யாருக்காக வேலை செய்தார் என்பதைக் கண்டுபிடிப்பது கடினம்தான். ஆனால், இந்த விவகாரத்தில் மேத்யூஸைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸ் தீவிரமாக உள்ளது.

அதேநேரம், மேத்யூஸ் கையில் கொடநாடு விவகாரம் போலவே மேலும் இரண்டு முக்கிய விவகாரங்கள் கையில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அதனால்தான் எடப்பாடி மீது இத்தனை புகார்களை தைரியமாக கூறுகிறார் என்கிறார்கள். அவரை கைது செய்ய முயன்றால் உடனடியாக அடுத்த வெடிகுண்டு வெடிக்கும் என்றும் சொல்கிறார்கள்.

அடுத்து மேத்யூஸ் கைது செய்யப்படுவாரா அல்லது அடுத்த வெடிகுண்டு வெடிக்குமா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.