டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் என்னதான் நடந்தது?

அன்புமணி ராமதாஸ் எம்.பி.யான பிறகு செய்த சாதனைகள் என்னவென்று டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.


தமிழகத்திலேயே மோசமான எம்.பி. என்று அன்புமணியை கூறவே, பா.ம.க.வினர் பெரும் ஆவேசம் அடைந்தனர். அதற்காக, பா.ம.க. உறுப்பினர்கள் டைம்ஸ் அலுவலகத்தில் நுழைந்து அராஜகம் செய்திருப்பதாக, டி.கே.எஸ்.. இளங்கோவன் காட்டமாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இப்போது பா.ம.க.வின் பாலு, காரசாரமாக ஒரு பதில் அனுப்பியிருக்கிறார். 

டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு வெளியிட்டுள்ள விவரங்கள் அனைத்தும் பொய்யானவை; தவறானவை என்று கூறியுள்ள பாலு, “மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் மட்டும் புவிவெப்பமயமாதல், காவிரி - கோதாவரி இணைப்பு, வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை, உயர்கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆகிய நான்கு முக்கிய பிரச்சினைகள் குறித்து மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசியுள்ளார்.

அதுமட்டுமின்றி, 10 வினாக்களை அவர் எழுப்பியுள்ளார். அவற்றில் 4 வினாக்களுக்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, கூட்டத்தொடர் முடிவடைந்து விட்டதால் மீதமுள்ள வினாக்களுக்கு விடையளிக்க முடியவில்லை என்பதையும் தெரிவித்துள்ளது” என்று விளக்கியுள்ளார்.

 கடந்த காலங்களில் அன்புமணி அவரது தொகுதி மேம்பாட்டு நிதியை செலவிடவில்லை என்று பொய்யான செய்தி ஒன்றை டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருந்தது. இப்போதும் அதே போன்று பொய்யான செய்தியை அந்த நாளிதழ் வெளியிட்டிருப்பதால் அதன் பின்னணியில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கலாம் என பாமக சந்தேகிக்கிறது என்றுள்ள கே.பாலு, “டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் அரசியல் பிரிவு ஆசிரியர் ஜெயாமேனன் அழைப்பின்படியே பாமக செய்தித்தொடர்பாளர் வினோபா, பாமக நிர்வாகி கோபால் ஆகிய இருவரும் ஜெயா மேனனை அவரது அலுவலகத்தில் சந்தித்து உண்மை நிலவரத்தை விளக்கியுள்ளனர்.

இதுதொடர்பாக ஜெயாமேனன், சிவக்குமார் ஆகியோருக்கும் வினோபா பூபதிக்கும் இடையே விவாதம் நடந்து கொண்டிருந்த போது, ஜெயாமேனனின் அறைக்குள் வந்த நாளிதழ் ஊழியர்கள் சிலர் வினோபா பூபதியை மிரட்டியதுடன், முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். அப்போது அவர்களை எச்சரித்த ஜெயாமேனன் அறையிலிருந்து வெளியேறும்படி ஆணையிட்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி தங்களின் செய்தியாளர் தரப்பில் தவறு இருப்பதாகவும், பா.ம.க. தரப்பில் விளக்கச் செய்தி கொடுத்தால் அதை விதிகளுக்கு உட்பட்டு பிரசுரிப்பதாகவும் உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து வினோபா பூபதியும், கோபாலும் அவருக்கு நன்றி கூறி திரும்பினர். இதைத் தவிர டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் அலுவலகத்தில் வேறு எதுவும் நடைபெறவில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், “டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் வன்முறை செய்ததாக பா.ம.க. மீது அவதூறு பரப்பிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் அதற்காக மன்னிப்பு கோர வேண்டும். அவ்வாறு மன்னிப்பு கோரா விட்டால் அவர்கள் மீது அவதூறு வழக்கு உள்ளிட்ட சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதுசரி, உண்மையில் என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா..? பா.ம.க.வினர் உள்ளே நுழைந்ததும், அங்கிருந்த பொருட்களை கீழே தள்ளி ரகளை செய்ததும் உண்மைதானாம். ஆனால், தேவையில்லாமல் பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று தவிர்க்கிறார்களாம்.