டெல்லியில் கடந்த செப்டம்பரில் கையெழுத்தான காம்காசா ஒப்பந்தம் குறித்து அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
காம்காசா ஒப்பந்தம்! அமெரிக்காவின் துணை ராணுவமாக மாறப்போகிறது இந்திய ராணுவம்?
ஆய்வு மற்றும் கட்டுரை: தமிழ்செல்வன்
1991ஆம் ஆண்டுக்கு முன்பு,
சோவியத் ஒன்றியம் இருந்த வரையில், உலகம் இருபெரும் பகைமுகாம்களாக பிரிந்திருந்தது.
அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் இருபெரும் வல்லரசுகளாக, உலகை இரண்டு முகாம்களாக கூறுபோட்டன.
இந்த முகாம்களில் இணைந்த நாடுகள், அமெரிக்கா அல்லது சோவியத் ஒன்றியத்தின் பதிலிப் போர்க்களங்களாக
மாற்றப்பட்டன; அந்த நாடுகளின் ராணுவம், அமெரிக்கா அல்லது சோவியத் ஒன்றியத்தின் துணை
ராணுவப் படைகளாக மாற்றப்பட்டன.
அமெரிக்காவின் முகாமில் இருந்த பாகிஸ்தானும்,
சோவியத் ஒன்றியத்தின் முகாமில் இருந்த ஆப்கானிஸ்தானும் இதற்கு சிறந்த உதாரணங்கள். சீர்குலைந்து,
சிதிலமடைந்து, உலகின் கருணைக்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஆனால் இந்தியா,
சீனா போன்ற நாடுகள் இந்த 2 முகாம்களிலும் இணையாமல் அணிசாரா நாடுகளாக தனித்து நின்றன.
இந்தியா இன்று உலக அரங்கில் மிகப்பெரும் ஜனநாயக நாடாக மிளிர்ந்து நிற்பதற்கு இந்த மரபே
காரணம்.
வலையில் வீழாத நாடுகளை, வேளாண் விதையில் மட்டுமல்ல
அரசியலிலும் மரபணு மாற்றம் செய்தே அமெரிக்கா வீழ்த்தி வந்துள்ளது. அந்நாட்டின் சுதந்திர
தேவி சிலையைவிட உயரமான சிலையை வைத்து விட்டதாக பெருமை பாராட்டும் இந்தியாவின் முறை
இப்போது. சிலைகளை நீங்கள் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும்போது, நாம் ஊன்றி நிற்கும்
அரசியல் மரபு பறிபோய்க் கொண்டிருக்கிறது.
டூ பிளஸ் டூ என்பது கழித்தல்
கணக்கு!
இந்தியாவும் அமெரிக்காவும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த 50 வழிமுறைகள் (மெக்கானிசம்) உள்ளன. அமெரிக்க அதிபரும் இந்திய பிரதமரும் நேரடியாக பேச்சு நடத்துவது உச்சி மட்ட பேச்சுவார்த்தை. இதற்கு அடுத்தபடியாக இரு நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை அமைகிறது. அந்த வகையில் 2018 செப்டம்பர் 6ஆம் தேதி டெல்லியில் 2+2 பேச்சு வார்த்தை நடைபெற்றது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸ் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பேச்சுவார்த்தையை நடத்தியதால் 2+2 எனக் குறிப்பிடப்பட்டது.
இரண்டு முறை திட்டமிட்டு தள்ளிப்போய், கடைசியில்
டெல்லியில் ஜவஹர்லால் நேரு பவனில் நடைபெற்றது. அணிசாரா இயக்கத்தின் சிற்பியான ஜவஹர்லால்
நேரு பெயரில் அமைந்த மாளிகையில் இந்த பேச்சு நடத்தப்பட்டது நகைமுரணா, திட்டமிட்ட செயலா
என்பது அரசுக்கே வெளிச்சம். வரி விதிப்பினால் ஏற்பட்ட வர்த்தக உரசல்கள், ஹெச்1பி விசா
கட்டுப்பாடுகள், ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளையும், ஈரானில் இருந்து எண்ணெயையும்
வாங்குவதால் பொருளாதாரத் தடைகளில் இருந்து விலக்கு போன்றவை குறித்து பேசப்பட்டாலும்,
இந்த பேச்சுவார்த்தையின் கருப்பொருட்கள் அவை அல்ல.
இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத்துறை மற்றும்
வெளியுறவுத்துறை சார்ந்த ஒத்துழைப்புதான் முதன்மையான பேசுபொருளாக அமைந்தன. இந்த பேச்சுவார்த்தையில்
காம்காசா என்ற பாதுகாப்புத்துறையில் மிகமுக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தானது.
அது என்ன காம்காசா ஒப்பந்தம்?
ஈராக்கின் மீது போர் தொடுக்க வேண்டுமா, ஆப்கானிஸ்தான்
மீது குண்டு போட வேண்டுமா, சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதமும் பயிற்சியும்
வழங்க வேண்டுமா, லிபியாவில் மும்மர் கடாபியை கூலிப்படை வைத்துக் கொலை செய்ய வேண்டுமா,
இஸ்ரேலின் அடாவடிகளை கண்டும்காணாமல் போக வேண்டுமா, வடகொரியா, வெனிசுலா, ஈரான், கியூபா
போன்ற நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமா என அமெரிக்கா எதைச் செய்தாலும்,
அதற்கு ஒத்து ஊதும் நாடுகளுடன், அதாவது நேச நாடுகளுடன் அமெரிக்கா 4 அடித்தள ஒப்பந்தங்களை
(foundational agreements) செய்துகொள்ளும்.
1. General Security Of
Military Information Agreement (GSOMIA)
இந்தியா 2002ஆம் ஆண்டில்
இந்த ஒப்பந்தத்தை செய்து கொண்டது
2. Logistics Exchange
Memorandum of Agreement (LEMOA)
இந்தியா 2016ஆம் ஆண்டில்
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
3. Communications
Compatibility and Security Agreement (COMCASA)
2018 செப்டம்பர் 6ஆம் தேதி
கையெழுத்தான காம்காசா ஒப்பந்தம் இது
4. Basic Exchange and
Cooperation Agreement for Geo-spatial Cooperation (BECA)
இந்த 4ஆவது ஒப்பந்தம், இனி
பேச்சுவார்த்தைக்குப் பிறகு கையெழுத்தாகும்.
இந்த நான்கும் தனித்தனி ஒப்பந்தங்கள் அல்ல, தொகுப்பு
ஒப்பந்தங்கள். காம்காசா உள்ளிட்ட முதல் 3 ஒப்பந்தங்கள் மூலம், இரு நாடுகளும் பரஸ்பரம்
மற்றொன்றின் படைத் தளங்களில் சப்ளைகளை நிரப்பிக் கொள்ளலாம். போர் விமானங்களுக்கு எரிபொருள்
நிரப்பிக் கொள்வது ஒரு உதாரணம். இந்திய போர் விமானங்கள் அமெரிக்காவில் உள்ள படைத்தளத்தை
பயன்படுத்துவதற்கு கற்பனையான தேவைகூட இல்லை என்பது புவியியல் அறிவு உள்ளவர்களுக்கு
சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
மாறாக அமெரிக்கப் போர்விமானங்கள் இந்தியாவில் உள்ள படைத் தளங்களில் எரிபொருள் நிரப்பும் தேவை இப்போது உள்ளது. வருங்காலங்களில் இன்னும் அதிக தேவை உள்ளது. மத்திய கிழக்கில், வளைகுடாவில், மேற்காசியாவில்,பெர்சிய வளைகுடாவில், வடஆப்பிரிக்காவில், சீனாவில், பாகிஸ்தானில் என எங்கெங்கும் அமெரிக்காவின் போர் விமானங்களுக்கு வேலை இருக்கிறது. டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தை மூலம் இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களிடையே நினைத்த உடனேயே பேசிக்கொள்ள ஹாட்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
காம்காசா ஒப்பந்தத்தின் மூலம் இரு நாட்டு ராணுவங்களும்
ஒத்திசைப் பெறுகின்றன. ராணுவத்தைப் பொறுத்தவரை தளவாடங்கள், தகவல் தொடர்பு இரண்டும்தான்
முதுகெலும்பும் மூளையும். இந்திய ராணுவத்தின் முதுகெலும்பும், மூளையும் அமெரிக்க தொழில்நுட்பங்களுக்கு
இனி ஒத்திசையும். உளவுத் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படும் குறியீட்டு முறை முதல் கருவிகளின்
இயக்கம் தொடங்கி படைகளுக்கு வழங்கப்படும் கட்டளைகள் வரை அனைத்தும் ஒத்திசையும். ஏனெனில்,
அவை அனைத்தையும் இனி அமெரிக்காவிடம்தானே வாங்கப் போகிறோம்!