இளமதிக்கு என்னாச்சு..? ஏன் பெற்றோரை தேர்வு செய்தார்..?

நேற்று முதல் இன்று வரையிலும் இளமதிக்கு என்னாச்சு என்பதுதான் டிரென்டிங் ஆக ஓடிக்கொண்டிருந்தது. யார் இந்த இளமதி.


ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர், செல்வன். பவானி குருப்பநாயக்கம்பாளையம் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண், இளமதி. இருவரும் ஒரே கம்பெனியில் வேலைபார்க்கும்போது பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலை பெண் வீட்டார் ஏற்றுக்கொள்ளவில்லை. அதையடுத்து, இருவரும் சாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டனர்.

அதன்பிறகு நடந்த அடிதடி மோதலில் இளமதியை மட்டும் அவரது பெற்றோர் இழுத்து கொண்டுபோய் விட்டார்கள். செல்வனுக்கும் அவருக்கு உதவி செய்தவர்களுக்கும் செம அடி. இந்த நிலையில் போலீஸ் தேடியும் இளமதியை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லப்பட்டது.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் திடீரென இன்று மேட்டூர் காவல் நிலையத்தில் ஆஜரானார். அப்போது தான் காதல் கணவருடன் செல்ல விரும்பவில்லை என்றும் தன் பெற்றோருடன் செல்ல இருப்பதாக சொன்னார்.

இதையடுத்து, அவர்களுக்கு திருமணம் செய்துவைத்த கொளத்தூர் மணி உள்ளிட்ட திராவிடர் கழகத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தினர் மிரட்டல் காரணமாக இளமதி அப்படி சொல்லியிருந்தாலும், நிச்சயம் தன்னிடம் திரும்பிவருவார் இளமதி என்று காத்திருக்கிறார் செல்வன்.