திண்டுக்கல் பூட்டுக்கு மட்டும் அப்படியென்ன ஸ்பெஷல்? சும்மாவா கிடைக்கும் புவிசார் குறியீடு!

திண்டுக்கல் பூட்டு உருவானது 1930ம் ஆண்டு.திண்டுக்கல்லைச் சேர்ந்த பரட்டை ஆசாரி என்பவர் 1930ம் ஆண்டு மாங்காய் வடிவத்தில் ஒரு பூட்டையும்,மேஜைகளைப் பூட்ட சதுர வடிவில் ஒரு பூட்டையும் செய்து அதை விற்பனைக்கு கொடுத்தார்.


உடைக்கவோ கள்ளச்சாவி போடவோ முடியாத அந்தப் பூட்டுகள் மக்களைக் கவர சில நாட்களிலேயே உள்ளூர் இரும்புக் கடைக்காரர்களிடம் இருந்து ஆர்டர்கள் குவிந்து விட்டன.அப்படிப் பரட்டை ஆசாரியின் சின்னஞ்சிறு பட்டரையில் இருந்து துவங்கிய திண்டுக்கல் பூட்டு மெல்ல மெல்ல அந்த ஊருக்கே அடையாளமாக ஆகிவிட்டது.

அதற்குக் காரணம் பரட்டை ஆசாதியின் தொழில் திறன் மட்டுமல்ல அவரது கற்பனைத் திறனும் கலை மனமும் அந்த பூட்டுகளின் வடிவமைப்பில் வெளிப்பட்டதுதான்.

பூட்டுக்கான தேவை அதிகரிக்க அதிகரிக்க பரட்டை ஆசாரியின் பட்டறையில் வேலை செய்து தொழில் கற்றுக்கொண்ட பலரும் தனித்தனி பட்டறைகளைத் திறந்தனர்.திண்டுக்கல் ,கரூர்,சேலம் பகுதிகளில் இரும்பு உற்பத்தி அதிகம் நடந்ததால் தொழில் சிறப்பாக வளர்ந்தது.இந்திய விடுதலைக்கு முன்பே,தமிழகம் தாண்டி இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும்,வெளிநாடுகளிலும் திண்டுக்கல் பூட்டின் பெருமை பரவிவிட்டது.

1957ம் ஆண்டு பூட்டுத் தொழிலாளர் சங்கம் உருவானது.1972ல் பூட்டு விற்பனை உச்சத்தை எட்டியபோது திண்டுக்கல்லில் 200க்கு மேற்பட்ட பூட்டுத் தொழிற்சாலைகள் இருந்தன.ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.

சிறிய பெட்டிக்கு போடும் பூட்டுகள் முதல் கோவில்கள்,வங்கிகள்,செட்டிநாடு வீடுகள் என்று தேவைக்கு ஏற்ப ரகரகமான பூட்டுகள் உருவாகத்துவங்கின.புதியபுதிய பெயர்களுடன்.

லண்டனில் இருந்து ரிப்பேருக்கு வந்த ஒரு பூட்டின் தொழில்நுட்ப வடிவத்தில் உருவான பூட்டுக்கு லண்டன் பூட்டு என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.அதன் உள்ளே ஷட்டர் போன்ற அமைப்பில் ஒரு காகித தடுப்பு இருக்கும்.தவறான சாவியைப் போட்டு அந்த லண்டன் பூட்டைத் திறக்க முயன்றால் உள்ளே உள்ள காகிதத் திறை கிழிந்துவிடும்.அப்புறம் அந்தப் பூட்டைத் திறக்கவே முடியாது என்பது லண்டன் பூட்டின் சிறப்பு.

இந்த பூட்டுக்கு மிகுந்த கிராக்கி ஏற்பட்டது.காரணம்,பெரிய பெரிய நிறுவனங்கள் இந்தப் பூட்டை விரும்பி வாங்கின அடுத்தது பெல் லாக்! இந்தப் பூட்டை பூட்டும் போதும் திறக்கும் போதும் மணி அடிக்குமாம்.

டிலோ பூட்டு என்கிற பூட்டை திண்டுக்கல் கூட்டுறவு சங்கம் தயாரிக்கிறது. இந்தப் பூட்டுடன் ஒரே ஒரு சாவிதான் தரப்படும் அது தொலைந்துவிட்டால் பூட்டையே உடைக்க வேண்டியதுதான்.

இப்படி 100 ரூபாய் முதல் 10000 ரூபாய்வரை விலையுள்ள பூட்டுகள் திண்டுக்கலில் தயாராகின்றன.இவற்றில் 100 கிராம் எடை கொண்ட சின்னஞ்சிறு பூட்டுகள் முதல்,ஒரு அடி நீள சாவியும் 5 கிலோ எடையும் கொண்ட பூட்டுகள்வரை அடக்கம். சும்மாவா தருவார்கள் புவிசார் குறியீடு!