வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்களிடம் என்ன சொன்னார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி?

கடந்த பிப்ரவரி 14ம் தேதி முதல் 14 நாட்களாக சென்னை வண்ணாரப்பேட்டையில், தமிழகத்தில் என்.பி.ஆர்., என்.ஆர்.சி., சி.ஏ.ஏ. சட்டங்களை அமல்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி, இஸ்லாம் மக்கள் போராடி வருகிறார்கள்.


இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வரை சந்தித்து போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முதல்வரை சந்தித்து முடித்தவர்கள் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்கள். 

தமிழக அரசு, சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி என்.பி.ஆர். கணக்கெடுப்பை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சி.ஏ.ஏ. சட்டம், என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர். தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்ற உத்தரவாதத்தையும் தமிழக அரசு வழங்கிட வேண்டும். நியாயமான காரணங்களுக்காக ஜனநாயக வழியில் போராடிய மக்கள் மீது தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என மூன்று கோரிக்கைகளையும் முதல்வரிடம் வைத்தோம். 

இதனை பரிசீலனை செய்வதாக மட்டுமே சொல்லியிருக்கும் முதல்வர், எங்கள் போராட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இதுகுறித்து போராட்டக்காரர்களிடம் கலந்து பேசி முடிவெடுப்பதாக சொல்லி வந்துவிட்டோம்.

எந்தவொரு கோரிக்கையும் நிறைவேறாதபட்சத்தில், போராட்டத்தைக் கைவிடும் எண்ணமே இல்லை என்கிறார்கள். போராட்டத்தை கைவிடுவதற்கான முயற்சியை அரசு உடனடியாக எடுக்கவேண்டும் என்பதுதான் தமிழ் மக்களின் கோரிக்கை.