இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயமாக ஹெல்மெட் அணியவேண்டும் என உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவுகள் பிறப்பித்துள்ள நிலையில், போலீசாரும் கண்டிப்பாக தலைக்கவசம் அணியவேண்டும் என்றும், உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக டிஜிபி ஜே.கே. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
நமக்கு ஒரு பிரச்னைன்னா போலீஸ்கிட்டே போறோம்... அந்த போலீஸ்க்கே பிரச்னைன்னா..? பரிதாப எஸ்.ஐ.

இந்நிலையில் சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவல் உதவி ஆய்வாளர் மதன்குமார் சில தினங்களுக்கு முன்னர் குற்றவாளிகள் குறித்த தகவல்கள் கிடைத்ததின் பேரில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவசர அவசரமாக புறப்பட்டு சென்றதால் தலைக்கவசம் அணிய மறந்துள்ளார்.
ஆய்வளார் மதன்குமார் தலைக்கவசம் இல்லாமல் செல்வதை பார்த்த நம்மில் ஒருவர் உடனே தனது செல்போனில் போட்டோ எடுத்து போக்குவரத்து காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள ஜி.சி.டி.பி. செயலியில் பதிவேற்றம் செய்துவிட்டார். இந்த புகாரை பதிவு செய்துகொண்ட காவல்துறை உடனடியாக மேலிடத்துக்கு தகவல் அனுப்பி மதன்குமாருக்கு பணியிடைநீக்க உத்தரவை கொடுத்துள்ளனர். இதைக் கண்ட காவல்ஆய்வாளர் மதன்குமார் அதிர்ச்சியடைந்து தற்போது பணிக்கு செல்லாமல் இருக்கிறார்.
நம்மில் பலர் போலிசிடம் சிக்கினால் எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்று ஏதேதோ சொல்லி குற்ற வழக்குகளில் இருந்து தப்பிக்க முயற்சிப்போம். ஆனால் போலிசுக்கே பிரச்சனை வரும்போது யாரைத் தெரியும் என்று அவர்களால் தப்பிக்க முடியும். அதுமட்டுமின்றி செல்போன் செயலி மூலம் புகார் பதியப்படுவதால் அந்த புகார் மீது நடவடிக்கை எடுத்ததற்கான ஆதாரத்தை போலீசார் தெரிவித்தாக வேண்டும் என்ற நிலை உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது தலைக்கவசம் அணியாமல் சென்ற போலீசுக்கு மற்றவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை போன்று அவருக்கும் விதித்து இருக்கலாம். சஸ்பெண்ட் செய்யுமளவுக்கு ஒன்றும் அது பிரதான குற்றம் அல்ல என தெரிவித்தனர்.
மேலும் சென்னையில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது மட்டுமே குறிவைக்கும் போலீசார், லைசென்ஸ், ஆர்சி புக், இன்சூரன்ஸ் இல்லாமல் செல்பவர்கள், ஒருவழிப்பாதையை மதிக்காமல் செல்பவர்கள், சாலையில் வலது புறமாக வண்டி ஓட்டுபவர்கள், வாகனங்களில் எல்இடி விளக்கு பொருத்தி எதிரே வருபவர்களை அச்சுறுத்துபவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை என கேள்வி எழுப்புகிறார்கள்.
சட்டம் தனது கடமையை தற்போது GCTP செல்போன் செயலி மூலம் குறுகிய வட்டத்தில் செய்துவருகிறது என்றால் அது மிகையல்ல.