16-ந் தேதி வங்க கடலில் உருவாகிறது புயல்..! 3 மாவட்டங்கள் உஷார்...!

அந்தமான் கடல் பகுதியில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வரும் 16-ந் தேதி வங்க கடலில் புயலாகவும் மாற வாய்ப்புள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கடலோர மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.


அந்தமானில் உருவாக கூடிய புயலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் இன்று செய்தியாளர் சந்திப்பில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இந்த புயலால் வரும் 15 ஆம் தேதி அன்று வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 16 ஆம் தேதி புயலாகவும் மாறி மத்திய வங்கக் கடல் பகுதியில் மையம் கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

மேலும், வரும் 15-ம் தேதி காற்றின் வேகம் மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும், 16-ம் தேதி 55- 65 கி.மீ.வேகத்திலும் , 17-ம் தேதி 65-75 கி.மீ. வேகத்திலும் அவ்வப்போது 85 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தினால் காற்றின் வேகம் அதனைத் தொடர்ந்து வலுப்பெறக்கூடும் என்பதால் கடலோர மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மத்திய வங்க்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என்றும் வலியுறுத்தப்படுகிறது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது என்பதை பற்றிய கேள்விக்கு, வானிலை இயக்குனர் புவியரசன் அவர்கள், தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாகவே மழை பெய்து வருகின்றது. மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

சென்னை மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் அல்லது வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்தார். இந்த இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலையாக 36 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸும் பதிவாகக்கூடும் என்றும் கூறினார்.

புதிதாக உருவாக கூடிய இந்த புயலால் குமரிக்கடல் பகுதி, மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு சூறாவளிக் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 65 கிலோ மீட்டர் வேகம் வரை வீசும் என்பதால் கடலோர பகுதி மக்கள் மீன பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.