சனி, ஞாயிறு கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! மீண்டும் ரெட் அலர்ட்!

திருவனந்தபுரம்: கேரளாவில் மிக அதிக மழை பெய்யும் என்று இநதிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டில் கேரளாவில் இருந்து தொடங்கி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் மழை கொடுத்து வருகிறது. ஆனால், கேரளாவில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது மீண்டும் தென்மேற்கு பருவமழை வலுபெற தொடங்கியுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள புதிய எச்சரிக்கை செய்தியில், ''ஜூலை 17 தொடங்கி மூன்று நாட்களுக்கு இடுக்கி, மலப்புரம், வயநாடு, கன்னுர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். இதேபோல, எர்ணாகுளம், திரிசூர் போன்ற மாவட்டங்களில் மிக மிக அதிக கனமழை பெய்யும். எனவே, இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், இதன் சுற்றுப்புற பகுதிகளில் வசிப்பவர்களும் முன்கூட்டியே தகுந்த முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டியது நலம்,'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர, எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், வயநாடு, பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் நிலச்சரிவு உள்பட பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.