தாகத்துல சாகவும் தயார்! ஸ்டெர்லைட் தண்ணீரை குடிக்க மாட்டோம்! தூத்துக்குடி மக்கள் ஆவேசம்!

தாகத்தில் செத்தாலும் சாவோம் ஸ்டெர்லைட் தண்ணீரை பயன்படுத்தமாட்டோம் என்று தூத்துக்குடி மக்கள் கூறியுள்ளனர்.


ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள அ.குமரெட்டியாபுரம்,  பண்டாரம்பட்டி, மீளவிட்டான், மடத்தூர் மற்றும் பிற கிராமங்களில் மாவட்ட நிர்வாகத்தினால் குடிநீர் சேவை திட்டமிட்டே நிறுத்தப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்ய இந்த கிராமங்களுக்கு வாகனங்களில் குடிநீர் கொண்டு வரப்படுகிறது.

குடிநீர் இல்லாமல் திண்டாடும் மக்கள் ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் குடிநீரை பயன்படுத்துவார்கள் என்ற நரித்தனத்தை  அரங்கேற்றியுள்ளது ஸ்டெர்லைட் நிர்வாகம். ஆனால் அனைத்து கிராம மக்களும் "நாங்கள் தண்ணீர் இல்லாமல் செத்தாலும் பரவாயில்லை, ஸ்டெர்லைட் நிர்வாகத்தால் வழங்கப்படும் தண்ணீரை வாங்க மாட்டோம்" என்று ஊருக்குள் ஸ்டெர்லைட் நிறுவனத்தால் அனுப்பப்பட்ட வாகனங்களை விரட்டியடித்துள்ளனர்.

 மேலும்  மீளவிட்டான் கிராமத்தில் குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இவ்வாறு அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருந்து ஸ்டெர்லைட் குடிநீர் வாகனத்தை விரட்டியுள்ளனர். ஒரு போதும் ஸ்டெர்லைட் தண்ணீரை பயன்படுத்தமாட்டோம் என்று அவர்கள் உறதிபடத் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தூத்துக்குடி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தங்களுக்கு தண்ணிர் கிடைக்காத நிலையில் ஸ்டெர்லைட் லாரிகளுக்கு மட்டும் எப்படி தண்ணிர் கிடைக்கிறது என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.