ராஜாஜியின் மீது பழி சுமத்தினாரா காமராஜர்?

காமராஜருக்கும் ராஜாஜிக்கும் கடுமையான கட்சிப் போர் நடந்தது உண்மை. ஆனால், ஒருவரையொருவர் தனிப்பட்ட வகையில் மதிப்பு கொடுத்தே வந்தனர்.


திராவிடக் கட்சிகள் தலையெடுத்த நேரத்தில், ராஜாஜி சுதந்திரா கட்சியைத் தொடங்கி ஆதரவு கொடுத்துவந்தார்.  அதன்பிறகு காட்சிகள் மாறின. 1971 தேர்தலில் ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் காமராஜரின் பழைய காங்கிரஸும் சேர்ந்து கூட்டணி வைத்தன.  அத்தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்தது.

ராஜாஜியுடன் கூட்டு சேர்ந்ததை மக்கள் விரும்பாததே இந்தத் தோல்விக்குக் காரணம் என்று அறிக்கை கொடுத்துவிடலாம் என காங்கிரஸ் தலைவர்கள் பலர் காமராஜருக்கு அறிவுரை கொடுத்தனர். இதற்கு காமராஜர் என்ன பதில் சொன்னார் என்பதை தன்னுடைய வார்த்தைகளில் கூறியிருக்கிறார் சோ.   :

"காமராஜின் பெரிய மனது திறந்தது. காமராஜ் என்ற அரசியல்வாதிக்கு அப்பாற்பட்டு நின்ற காமராஜ் என்ற மனிதர் விஸ்வரூபம் எடுத்து நின்றார். பெருந்தன்மை வார்த்தைகளாக உருவெடுத்து என் முன்னே நர்த்தனமாடியது. 'தோத்துட்டோம்கிறதுக்காக எல்லாத்தையும் மறந்துடறதா?  நம்ம தோத்ததுக்கு ஆயிரம் காரணம் இருக்கும். முதல்லே கையிலே பணம் இல்ல. ஏமாத்தறவங்களைத்தான் ஜனங்க நம்புறாங்கன்னு ஆயிடுச்சு.

எல்லாத்துக்கும் சேத்து ராஜாஜி தலை மேலே பழியைப் போடச் சொல்லறீங்களா? ஜெயிப்போம்னு நெனச்சு தானே அவரோட சேந்தோம்னேன்! ஜெயிக்கணும்னா வேண்டியவரு; ஜெயிக்காட்டி வேண்டாதவரா? அவர் என்ன கெடுதல் செய்துப்புட்டாரு? அவரும் நானும் நிறைய விஷயங்கள்லே ஒத்துப் போறதிலலே. ஆனா தேசம் நல்லா இருக்கணும், மக்கள் நல்லா இருக்கணும்னு அவருந்தானே விரும்பறாருன்னேன்? அதை ஒத்துக்கிட்டுத்தானே கூட்டு சேர்ந்தோம்?"

"இது எல்லாத்துக்குமா சேர்த்து ராஜாஜியாலேதான் தோத்துட்டோம்னு நினைச்சிக்கிட்டா யாரை ஏமாத்தப் போறோம்? அவரு நம்ம கூட இருக்காருங்கறத்துக்காவே, அந்த மரியாதைக்காகவேகூட நமக்கு அதிகமா ஓட்டு வந்திருக்கலாம் இல்லியா?" என்று கொந்தளித்திருக்கிறார். இப்படியொரு தலைவனை இனியும் பார்க்க முடியுமா?