நிம்மதியான வாழ்க்கை வேண்டுமா? அர்த்தமுள்ள இந்த சிறிய கதைய மட்டும் படிங்க ..

வாழ்க்கை என்பது ஓர் அற்புதமான வரம். இந்த உடலில் உயிர் இருக்கும் வரையிலும் ஆனந்தமாகவும் நிம்மதியாகவும் வாழணும் என்பதுதான் எல்லா மனிதர்களின் விருப்பம். நிறைய நிறைய பணமும், வசதி வாய்ப்புகளும், அதிகாரமும் இருந்தால்தான் ஆனந்தம் கிடைக்கும்னு நிறைய பேர் நினைக்கிறார்கள். அதில் இதில் எந்த உண்மையும் கிடையாதுங்க.


    உண்மையில் இன்பம் என்பது ஒவ்வொருவரின் மனதுக்குள்ளும்தான் ஒளிந்து கிடக்கிறது. மனதுக்குள் இருக்கும் ஆனந்தத்தையும் நிம்மதியையும் எப்படிக் கண்டுகொள்வது... அனுபவிப்பது... வெளியே கொண்டுவருவது என்பது பற்றி நாம் தினமும் பேசலாம்.

நிம்மதி எங்கே இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், இந்தக் கதையைக் கேளுங்கள்.

ஒருவன் ரொம்பவும் சிரமப்பட்டு உழைத்து பணக்காரன் ஆனான். எந்த நேரமும் உழைப்பு, பணம் என்ற நினைப்பிலேயே இருந்ததால் நிம்மதி இல்லையே என்ற கவலை வந்துவிட்டது. எப்படி நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வது என்று பலரிடமும் போய் கேட்டான். யாரும் அவனுக்குச் சரியான வழியைக் காட்டுவதாக இல்லை. கடைசியாக காட்டுக்குள் இருந்த ஒரு ஞானியைக் கண்டுபிடித்துக் கேள்வி கேட்டான்.

‘‘என்னிடம் செல்வம் இருக்கிறது. சொந்தம் இருக்கிறது. ஆனால் நிம்மதி மட்டும் இல்லை. நான் ஆனந்தமாக வாழ வழி காட்டுங்கள்’’ என்று மன்றாடிக் கேட்டான்.உடனே அவர், ‘‘சரி உன்னிடம் இருக்கும் பணம், தங்கம், பத்திரங்கள் எல்லாவற்றையும் மொத்தமாகக் கொண்டுவா... நான் வழி காட்டுகிறேன்’’ என்றார்.

உடனே வீட்டுக்குப் போன பணக்காரனும் ஒரு பெரிய சூட்கேஸில் பணம், நகை, பத்திரங்கள் எல்லாவற்றையும் மொத்தமாக அடைத்து எடுத்து வந்தான். ஞானி ஆசிரமத்துக்குள் இல்லை என்றதும் அவருக்காகக் காத்திருந்தான். அந்த நேரம் திடீரென அங்கே வந்த ஒரு முரடன் அவரிடம் இருந்த சூட்கேஸைப் பறித்துக்கொண்டு வேகமாக ஓடினான். உடனே பணக்காரனும் அவனுக்குப் பின்னே விரட்டிக்கொண்டு ஓடினான். எங்கெங்கோ காட்டுக்குள் ஓடியவன் கடைசியாக மீண்டும் ஆசிரமத்துக்குள் திரும்பி வர, ஞானியும் அவரது சீடர்களும் அந்த முரடனைப் பிடித்துக் கொண்டார்கள். அவனிடம் இருந்த சூட்கேஸைப் பறித்து பணக்காரரிடம் கொடுத்தார்கள்.

‘‘சாமி... இந்தப் பெட்டி கிடைச்சதும்தான் எனக்கு நிம்மதியா இருக்கு... சந்தோஷமா இருக்கு...’’ என்று பணக்காரர் ஆனந்தப்பட்டார். கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்தது.‘‘இத்தனை நாளும் இந்தப் பெட்டியும் இதில் உள்ள பொருட்களும் உன்னிடம்தானே இருந்தன. பிறகு ஏன் ஆனந்தமும் நிம்மதியும் உன்னிடம் இல்லை என்று வருத்தப்பட்டாய்?’’ என்று கேட்டார் ஞானி.

அதன் பிறகுதான் பணக்காரனுக்கு உண்மை புரிந்தது. பணக்காரனுக்கு மட்டுமில்லை நமக்கும் இந்த உண்மை புரியவேண்டும். நிம்மதியையும் சந்தோஷத்தையும் வெளியில் தேடுவது வீண் வேலை... ஆம் சந்தோஷம் நம்மிடம்தான் இருக்கிறது. அதனை நாம்தான் கண்டறிந்து அனுபவிக்க வேண்டும்.