கால் கடுக்க காத்திருக்கும் பக்தர்கள்! ஆனால் நம்பர் 1 ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு VVIP தரிசனம்! அத்திவரதர் சன்னதியில் என்ன நடக்கிறது?

லட்சக்கணக்கான பக்தர்கள் கால் கடுக்க காத்திருந்து அத்திவரதரை தரிசித்து செல்லும் நிலையில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் விவிஐபி போல் அத்திவரதர் சன்னிதானத்தில் அமர்ந்து தரிசனம் செய்துள்ளார்.


கடந்த இரண்டு வார காலமாக காஞ்சிபுரமே அல்லோலப்படுகிறது. காரணம் 40 ஆண்டுகளுக்கு பிறகு தரிசனம் தரும் அத்திவரதரை பார்க்க லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர். சாதாரணமான நாட்களில் அத்திவரதரை பொதுமக்கள் தரிசிக்க 4 மணி நேரம் வரை ஆகிறது. விவிஐபிக்கள் என்றால் 10 நிமிடத்தில் தரிசனத்தை முடித்துவிட்டு செல்கின்றனர். 

முதலமைச்சர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் போன்றோர் விவிஐபி கேட்டகிரியில் சென்று அத்திவரதரை நோகாமல் தரிவித்துவீட்டு திரும்புகின்றனர். ஆனால் சாமான்ய மக்கள் தான் கால் கடுக்க காத்திருந்து அவரை தரிசிக்கின்றனர்.

சில சமயங்களில் கூட்டத்தை பார்த்துவிட்டு பக்தர்கள் பாதியிலேயே திரும்பிவிடுகின்றனர். அதுவும் சனி ஞாயிறு என்றால் அத்திவரதர் தரிசனத்திற்கு 7 மணி நேரம் கூட ஆகிறது. இந்த நிலையில் மதுரை, மற்றும் சென்னையில் பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய வரிச்சியூர் செல்வம் அத்திவரதரை தரிசித்தது சர்ச்சையாகியுள்ளது.

பொதுமக்களே வரிசையில் காத்திருந்த தரிசித்து வரும் நிலையில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய மற்றும் சரித்திர பதிவேட்டு குற்றவாளி என்று அடையாளப்படுத்தப்படும் வரிச்சியுர் செல்வம் தனது கூட்டாளிகளுடன் அத்திவரதரை விவிஐபி பகுதியில் தரிசித்துள்ளார்.

அத்திவரதர் சன்னதியில் அமர்ந்து வரிச்சியூர் செல்வம் செய்த தரிசனம் தற்போது வைரலாகி உள்ளது. போலீசாரால் சரித்திரபதிவேடு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள வரிச்சியூர் செல்வம் எப்படி விவிஐபி ஆக முடியும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே பணம் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் விவிஐபி தரிசனம் பெற முடியும் என்பது இதன் முலம் நிரூபணமாகியுள்ளது.