தானத்தில் கர்ணனை விஞ்சிவிட்டார் பிரதமர் மோடி என்று உலாவரும் பதிவு படு வைரலாகிவருகிறது. படித்துப் பாருங்கள்.
தானத்தில் கர்ணனையும் விஞ்சி விட்டாராம் பிரதமர் நரேந்திர மோடி..! இணையத்தில் உலாவரும் வைரல் பதிவு.

ஒரு முறை தானத்தில் சிறந்தவன் யார் என்பதில் தர்மனுக்கும்,கர்ணனுக்கும் பெரும் போட்டி ஏற்பட்டது. இது பரமாத்வான கிருஷ்ணனுக்கு தெரிய வந்தது. உடனே இருவரையும் அழைத்தார்.இருவருக்கும் இரண்டு மலைகளைத் தந்தார்.அந்த மலைகள் முழுக்க முழுக்க தங்கத்தால் ஆனது.
தர்மனையும்,கர்ணனையும் அழைத்த கிருஷ்ணர்,தானம் தருவதில் யார் சிறந்தவர் என்பது தெரிய வேண்டுமானால் நீங்கள் இருவரும் இந்த இரண்டு மலைகளையும் இன்று மாலைக்குள் தானம் தந்துவிட வேண்டும் என்றார்.
தர்மர் உடனே களத்தில் இறங்கினார். மக்கள் தங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் தங்கத்தை வெட்டி எடுத்துக் கொள்ளலாம் என ஊர்,நகரம்,நாடு முழுக்க,தண்டோரா போடச் சொன்னார். லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர்.மலையை முடிந்த அளவிற்கு வெட்டி தங்கத்தை அள்ளிச் சென்றனர்.
மாலை வந்தது. தர்மரது மலை பாதி தான் குறைந்திருந்தது. கிருஷ்ணரைப் பார்க்க தர்மர் அரக்க பரக்க ஓடி வந்தார். அங்கே கர்ணன் ஏற்கனவே வந்திருந்தார். கர்ணனைப் பார்த்தால் பரபரப்பின்றி அமைதியாக இருந்தார்.
தான் நாடு முழுக்க தண்டோரா போட்டு அதனால் லட்சக்கணக்கான மக்கள் குவிந்து தங்கத்தை வெட்டி எடுத்துச் சென்றனர்.இவ்வளவு செய்த தன்னாலேயே பாதி மலையைக் தான் தர முடிந்தது.கர்ணனைப் பார்த்தால் எதையும் செய்தது போலத் தெரியவில்லை.அமைதியாக இருக்கிறான்.எனவே கர்ணன் போட்டியில் தோற்று விட்டான் போல என்ற எண்ணம் தர்மன் மனதில் உண்டானது.
அதைப் புரிந்து கொண்ட கிருஷ்ணர், "தர்மா,போட்டியில் வென்றது கர்ணன் தான்.கர்ணன் தான் தானத்தில் சிறந்தவன்.நீ லட்சக்கணக்கான மக்களை அழைத்து மலையை வெட்டிக் கொள்ளச் சொன்னாய்.ஆனால் கர்ணனோ நான் தங்க மலையைத் தந்த அடுத்த கணமே தெருவில் சென்ற ஒருவனை அழைத்து முழு மலையையும் அவனுக்கே தானம் தந்துவிட்டு,இன்னும் ஏதாவது இருக்கிறதா என்று என்னிடம் வந்து விட்டான்.அதெப்படி முழு மலையையும் ஒருவருக்கே தருவது என்ற எண்ணத்தில் நீ இருந்தாய்.ஆனால் கர்ணனோ தானம் கொடுப்பது என்று வந்தபின் எவ்வளவு தந்தால் என்ன என்று நினைத்தான்.எனவே கர்ணனே தானத்தில் சிறந்தவன்...." என்று கிருஷ்ணர் கூறினார்.
கிருஷ்ணர் பேசி முடித்ததும்,பிரபு ஒரு நிமிடம்...என்றவாரே நாரதர் அந்த இடத்திற்கு வந்தார்.
"தர்மர்-கர்ணன் இந்த இருவரையும் விட தானத்தில் மிகச் சிறந்தவர் ஒருவர் இருக்கிறார்..." என்றார். நாரதர் இப்படிச் சொன்னதும்,கிருஷ்ணனுக்கே ஆர்வம் தாங்கவில்லை.
"தானத்தில் இவர்களை விட சிறந்தவர்கள் இருக்கிறாரா? யார் அது?" என்று ஆர்வம் பொங்க நாரதரிடம் கேட்டார்.
நாரதர் ஒரு இடத்தைக் கைகாட்டினார். அங்கே ரபேல் விமானதயாரிப்பாக இருந்தாலும் தொலைத்தொடர்புத்துறையாக இருந்தாலும், சூரிய மின்சாரம் தயாரிப்பாக இருந்தாலும், இப்போது அரை ஏக்கர் ஒரு ஏக்கர் விவசாயியாக இருந்தாலும்.... அம்பானியின் ரிலையன்ஸ் என்ற ஒரே ஒரு நிறுவனத்திற்கு மட்டும் ஒட்டு மொத்தமாக வாரி வழங்கிய வள்ளல் பாரத பிரதமர் மோடி அடக்கமாக நின்று கொண்டிருந்தார்.
அதைக் கண்டு தர்மர், கர்ணன் இருவரும் வெட்கித் தலைகுனிந்தனர்.
பாரத் மாதாகீ...