அலைகடலே! மாமல்லபுரம் கடற்கரை..! தன்னை மறந்து மோடி எழுதிய கவிதை..! ஒரு வாரத்திற்கு பிறகு வைரலாகும் தமிழ் பெயர்ப்பு..!

அடல்பிஹாரி வாஜ்பாய்க்குப் பிறகு ஒரு கவிதை எழுதும் பிரதமரை நம் இந்தியா பெற்றுள்ளது. அதுவும் நம் தமிழ்நாட்டுக்கு சீன அதிபரை சந்திக்க வந்த நேரத்தில், மாமல்லபுரத்தின் கடல் அலையைப் பார்த்து ரசித்து இந்தக் கவிதையை எழுதினாராம்.


அவர் எழுதிய கவிதையின் தமிழாக்கத்தை பிரதமர் மோடியே, அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்போது இந்தக் கவிதைக்கு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் ஒவ்வொருவரும் பொழிப்புரை எழுதி வருகிறார்கள். வானதி வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், மக்கள் சேவையில் தன்னை அர்ப்பணிக்கும் ஒவ்வொருவருடைய மனதும் கடலைப் போல் மாறவேண்டும் என்ற தங்கள் மனது புரிகிறது என்று ஐஸ் வைத்திருக்கிறார். 

வானதி சொல்வது சரிதானா என்பதை பிரதமர் எழுதிய கவிதையைப் படித்து தெரிஞ்சுக்கோங்க. இதோ அந்தக் கவிதை.

அலைகடலே! அடியேனின் வணக்கம்

அளப்பரிய, முடிவற்ற, ஒப்பில்லாத வர்ணனைகளைக்

கடந்த நீலக்கடலே

உலகிற்கு உயிரளிக்கும் நீ

பொறுமையின் இலக்கணம்

ஆழத்தின் உறைவிடம்

அலைகடலே! 

அடியேனின் வணக்கம்.

வெளித்தோற்றத்திற்கு கோபமாய், வீரத்துடன் 

பேரிரைச்சலோடு எழும் அலைகள்

-உன் வலியா? வேதனையா?

துயரமா? எதன் வெளிப்பாடு?

இருந்தபோதிலும் உன்னை

கலக்கமின்றி, தடுமாற்றமின்றி

உறுதியுடன் நிற்க செய்கிறது

உன் ஆழம்.

அலைகடலே! 

அடியேனின் வணக்கம்.

உன்னிடம் உள்ளது எல்லையில்லாத வலிமை 

முடிவில்லாத சக்தி ஆனாலும்

பணிதலின் பெருமையை

நிமடந்தோறும் நவில்கிறாய்-நீ

கரையைக் கடக்காமல்

கண்ணியத்தை இழக்காமல்.

அலைகடலே!

அடியேனின் வணக்கம்

கல்வித் தந்தையாய் 

ஞான குருவாய்

வாழ்க்கை பாடத்தை போதிக்கிறாய் நீ

புகழுக்கு ஏங்காத, புகலிடத்தை நாடாத

பலனை எதிர்நோக்காத

உன் பயணம் தரும் பாடங்கள் ஏராளம்

அலைகடலே! 

அடியேனின் வணக்கம்

நிற்காமல் சளைக்காமல் வீசும் உன் பேரலைகள் 

’முன்னேறுவதே வாழ்க்கை’ என்ற உபதேச மந்திரத்தை உணர்த்தும்

முடிவில்லாத பயணமே முழுமையான உன் போதனை

அலைகடலே! 

அடியேனின் வணக்கம்

விழும் அலைகளிலிருந்து 

மீண்டும் எழும் அலைகள்

மறைந்து

மீண்டும் துவங்கும் உதயம் பிறப்பு-இறப்பு என்பது தொடர் வட்டம்

உனக்குள் மடிந்து - பின்

உயிர்த்தெழும் அலைகள்

மறுபிறப்பின் உணர்வூட்டம்

அலைகடலே! 

அடியேனின் வணக்கம்

பழம்பெரும் உறவான 

சூரியனால் புடமிட்ட

தன்னையழித்து ,

விண்னைத்தொட்டு

கதிரவை முத்தமிட்டு

மழையாய் பொழிந்து

நீர்நிலைகளாய், சோலைகளாய்

மகிழ்ச்சி மணம் பரப்பி

படைப்பை அலங்கரித்து - எல்லோருக்கும்

வாழ்வளிக்கும் நீர் நீ.

அலைகடலே! 

அடியேனின் வணக்கம்

வாழ்வின் பேரழகு நீ 

விஷத்தை அடக்கிய

நீலகண்டன் போல - நீயும்

எது வந்தாலும் ஏற்றுக் கொண்டு

புது வாழ்வை

பிறர்க்களித்து

சொல்கிறாய்

சிறந்த வாழ்வின் மறுபொருளை.

அலைகடலே! 

அடியேனின் வணக்கம்