ஜெ.,வுக்கு பிறகு எடப்பாடி! தீயாய் பரவும் எம்ஜிஆர் செங்கோல் வழங்கும் வீடியோ! உண்மை என்ன? பரபரப்பு ரிப்போர்ட்!

1986ம் ஆண்டு எம்ஜிஆருக்கு ஜெயலலிதா செங்கோல் வழங்கும்போது அப்போது செங்கோலை சேர்த்து பிடித்த அதிமுக தொண்டர் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


1986 ஜூலை 12ல் மதுரையில் எம்.ஜி.ஆரின் ரசிகர் மன்றங்கள் ஒருங்கிணைந்து மாநாடு நடத்தினர். அந்த மாநாட்டில் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் டி.எம்.சௌந்தரராஜன்-சுசிலாவின் குரல்களில் இசைக் கச்சேரியும் நடைபெற்றது.  

அந்த மாநாட்டில் 6 அடி உயர செங்கோலைத் தயாரித்த அதிமுகவினர் அதை ஜெயலலிதாவின் கையால் எம்ஜிஆருக்கு வழங்க வைத்தனர். ஆனால் செங்கோலைப் பெற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர், திருப்பி ஜெயலலிதாவிடமே வழங்கினார். அந்த வீடியோ அ.தி.மு.க தொண்டர்களால் தற்போது பரப்பப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில் செங்கோலை வாங்கும்போது எம்ஜிஆர் அருகில் நின்ற அ.தி.மு.க தொண்டரையும் அழைத்து, செங்கோலை சேர்த்துப்பிடிக்கச் செய்தார். அந்த தொண்டர் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று அதிமுகவினரால் பேசப்பட்டு வருகிறது. தனக்குப் பிறகு அ.தி.மு.க-வை வழிநடத்தப்போகும் இருவரையும் ஒரேமேடையில் அப்போதே அடையாளம் காட்டிவிட்டார் எம்ஜிஆர். என்று அதிமுகவினர் கூறிவருகின்றனர்.

இதுகுறித்து அன்றைய அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமியிடம் தெரிவித்தபோது எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் சேர்ந்தது 1988ம் ஆண்டு.ஆனால் அந்த மாநாடு 1986ம் ஆண்டு நடைபெற்றது என தெரிவித்தார்.

ஒரு கட்டடத்தைத் திறந்து வைப்பதாக இருந்தால்கூட, அந்தக் கட்டடத்தைக் கட்டிய கொத்தனாரை வைத்துத் திறக்கச் சொல்வது எம்ஜிஆர் வழக்கம். அதுபோல் அன்று அந்த செங்கோலைக் கொடுக்கும்போது, தொண்டர் கையிலும் அந்த செங்கோல் இருக்க வேண்டும் என்று அன்றைக்கு மதுரையைச் சேர்ந்த சாதாரண தொண்டரை அழைத்தார். அதை நான் நேரில் பார்த்தேன். அந்த நிகழ்ச்சிக்கும் எடப்பாடிக்கும் முடிச்சுப்போடாதீர்கள் என கேட்டுக் கெண்டார்.