எங்கேப்பா போனீங்க கருத்து சுதந்திர போராளீஸ்! நேற்று விகடன், இன்று மக்கள் தொலைக்காட்சி, காவேரி டி.வி. நாளைக்கு யாரோ..?

ஊருக்கு ஒரு பிரச்னை என்றால் முதல் ஆளாக போர்க்கொடி தூக்குவது பத்திரிகையாளன்.


ஆனால், அவனுக்கு ஒரு பிரச்னை என்றால் யாரும் வாய் திறக்க மாட்டார்கள். அது, நிர்வாகத்துக்கும் வேலைக்காரனுக்கும் இடையிலான பிரச்னை என்றே பார்க்கப்படும். ஆனால், கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம் பற்றி வெகுவாக பேசுவார்கள், போராடுவார்கள். உண்மையில் இப்போது பத்திரிகையாளர்கள், ஊடகர்களின் சுதந்திர வெளி குறுகிக்கொண்டே வருகிறது. தற்போது பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது.

சமூக ஊடகத்தில் பதிவிட்ட கருத்துக்காக விகடனில் ஒரு ஆர்டிஸ்ட் திடீரென வேலையை விட்டு நிறுத்தப்பட்டார். அதேபோன்ற காரணத்துக்காக மக்கள் தொலைக்காட்சியில் ஒருவரும் நீக்கப்பட்டுள்ளனர். இப்போது காவேரி டிவியில் அதுவே பெரும் பிரச்சினையாக மாறி இருக்கிறது.

பத்திரிக்கையாளர்கள், ஊடகர்களின் ஜனநாயக உரிமை, கருத்துரிமையைப் பறித்துவிட்டு சமூகத்தில் ஜனநாயக உரிமை, கருத்துரிமையை ஊடக நிறுவனங்களால் எப்படிக் கொண்டுவர முடியும்? பத்திரிக்கையாளர்களை இப்படி நீக்குவது உழைக்கும் பத்திரிகையாளர் சட்டம் 1955 க்கு எதிரானது. சட்ட விரோதமானது. தொழிலாளர் நலச் சட்டங்களுக்கும் எதிரானது என்றெல்லாம் சொல்லலாம், கேட்பது யாரோ..?