பெண் குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களை தூக்கில் போடக்கூடாதாம்! வரிந்து கட்டும் கனிமொழி!

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்குத்தண்டனை கொடுக்கும் போக்சோ சட்டத்திருத்தம் நிறைவேறியிருக்கிறது.


மக்களவையில் இந்த மசோதா குறித்த விவாதத்தில் பேசினார் தி.மு.க. மக்களவை குழு துணைத் தலைவர் கனிமொழி. “இப்போது போக்சோ சட்ட திருத்தத்தில் மரண தண்டணையைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை என்று விதிக்கப்படும் பட்சத்தில் நீதிபதி, பாதிக்கப்பட்ட குழந்தையிடம் விசாரணை நடத்தும் விதம் மாறுபடும். இந்த விசாரணையே அந்தக் குழந்தைக்கு இன்னுமொரு கொடுமையாக மாறக் கூடும். அதிபட்சம் மரண தண்டனை என்று நிர்ணயிக்கப்படும் பட்சத்தில் நீதிபதி குற்றத்தை முழுமையாக உறுதிப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்.

பெரும்பாலும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு சாட்சிகள் இருப்பதில்லை. அதற்காக பாதிக்கப்பட்ட குழந்தையிடம் நேரடியாகவே பல கேள்விகளை அவர் கேட்க வேண்டியிருக்கும். இந்த அனுபவம் அந்த குழந்தைக்கு சொல்லவொண்ணா துயரத்தையே தரும். குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் கொடூரர்களுக்கு துளியளவும் கருணை காட்டக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்த நாடும் அதையே நினைக்கிறது. ஆனால் அதற்காக மரண தண்டனை என்ற உச்சபட்ச தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில் அந்த பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நேரிடும் நிலை, புகார் அளிப்பதில் இருந்து தடுக்கும் குடும்பம் என்று பல அம்சங்களையும் கருத்தில் கொண்டு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன்.

தண்டனையை அதிகரிப்பது ஒன்றே இதற்குத் தீர்வாகிவிடாது. எனவே இந்த சட்ட மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கோ, தேர்வுக் குழுவுக்கோ அனுப்பி அதில் சொல்லப்படும் ஆலோசனைகளை ஏற்று திரும்பக் கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’ என்று பேசினார் கனிமொழி எம்.பி. ஆனால், குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனைதான் சரியான தீர்வு' என விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். கோவையில் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தணடனை அளித்திருக்கிறது.

இதை வரவேற்று உச்ச நீதிமன்றத்திற்கு தேமுதிக சார்பில் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே எங்கும் நடக்காத வண்ணம் போக்சோ சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பதையும் தேமுதிக சார்பில் வரவேற்கிறோம். குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனைதான் சரியான தீர்வு' என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

யார் சொல்றது சரின்னு மக்கள்தான் முடிவு எடுக்கணும்.