விஜயகாந்துக்குத் தெரியாமலே ஏலத்துக்கு வந்த விஜயகாந்த் சொத்து! ஆளும் கட்சி குடுத்த பணம் என்னாச்சு?

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் விஜயகாந்த் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாததால் அவருக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் கல்லூரி, வீடு உள்ளிட்ட சொத்துக்களை வங்கி ஏலத்திற்கு கொண்டுவந்துள்ளது.


கோடி கோடியாகக் கொடுத்த பணத்தை தேர்தலுக்கும் செலவு செய்யலை, கடனும் கட்டலை, அப்படின்னா என்ன செஞ்சீங்க என்று அலறுகிறது அ.தி.மு.க. காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் விஜயகாந்திற்கு சொந்தமாக ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி உள்ளது. இது ஸ்ரீஆண்டாள் அழகர் டிரஸ்ட் மூலமாக நடத்தப்பட்டுவந்தது. இந்த கல்லூரியின் நிலம் மற்றும் விஜயகாந்திற்கு சொந்தமான சில சொத்துக்களை சென்னை மவுண்ட் ரோட்டிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அடகு வைத்து 5,52,73,825 ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. அதற்கு விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் ஜாமீன் போட்டுள்ளனர். இந்தக் கடனையும் வட்டியையும் திருப்பிச் செலுத்தத் தவறியதால், விஜயகாந்திற்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் ஏலத்திற்கு வந்துள்ளன.


ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரிக்கு குறைந்தபட்ச ஏலம் கேட்பு விலையாக 92 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே சென்னை சாலிகிராமம் காவேரி தெரு மற்றும் வேதவள்ளி தெருவில் அமைந்துள்ள விஜயகாந்துக்கு சொந்தமான 4,651 சதுர அடி நிலத்திற்கு 4.25 கோடி ரூபாய் குறைந்தபட்ச கேட்பு விலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுதவிர, விஜயகாந்த்துக்கு சொந்தமான 3013 சதுர அடி காலி மனையின் குறைந்தபட்ச ஏலம் கேட்புத் தொகை 3 கோடி ரூபாயாக வங்கி நிர்ணயித்துள்ளது. வரும் ஜூலை 26ம் தேதி இந்த சொத்துக்கள் ஏலமிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய நாளிதழ்களில் வெளியான இந்த செய்தியைக் கண்டு தே.மு.தி.க.வினர் கண் கலங்கினார்கள்.


இந்த சொத்துக்கள் எல்லாமே விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன்பு வாங்கியவை. கல்லூரியில் கட்டமைப்பு சரியில்லை என்பதால், ரேட்டிங் இல்லாமல் வருமானம் சுருங்கிப்போனது. அதேபோல் கேப்டன் டி.வி., சொந்தப் படம் என்று எல்லாமே நஷ்டம். கடந்த மக்கள் நலக்கூட்டணி சமயத்தில் தேர்தலுக்கு செலவழித்ததும் இந்த சிக்கலுக்குக் காரணம். இதை எல்லாம் கணக்குக் காட்டிதான் அ.தி.மு.க.விடம் பேரம் பேசி பணம் வாங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், அந்தப் பணம் தேர்தலுக்கு முறையாக செலவழிக்கப்படவில்லை.

அதனால், அந்தப் பணம் என்னவானது என்று அ.தி.மு.க.வினர் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த விஷயத்தில் பெரும் சோகம் என்னவென்றால், கல்லூரி, வீடு போன்றவை ஏலத்துக்கு வரும் விவகாரம் இந்த நிமிடம் வரை விஜயகாந்திற்கு தெரியாதுஎன்பதுதான்.
பரிதாபம்தான்.