தமிழக முதல்வரிடம் உதவி கேட்ட விஜய் ரசிகர்... அடுத்து நடந்த தரமான சம்பவம்.

உங்களுடைய குறைகளை மனுவாக கொடுங்கள், நாங்கள் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் அதனை தீர்க்கிறோம் என்று சொல்கிறார் ஸ்டாலின். இதனை உடைப்பது போன்று 1100 எண்ணை அறிமுகப்படுத்தி, குறைகளை அவ்வப்போது தீர்த்துவருகிறார்.


கட்சி, ஜாதி, மதம் என்ற பாகுபாடும் பார்க்காமல் உதவிகள் செய்து வருகிறார் தமிழக முதல்வர். அதனால்தானோ என்னவோ, விஜய் ரசிகர் ஒருவர் முதல்வரிடம் உதவி கேட்டுள்ளார். அடுத்து என்ன நடந்தது என்பதை படியுங்கள்.

திருப்பூரைச் சேர்ந்த தீவிர விஜய் ரசிகரான ஹரி என்பவர் ‘வாத்தி ரெய்டு’ என்னும் பெயரில் டுவிட்டர் கணக்கை நடத்தி வருகிறார். இவர் தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உருக்கமான கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார்.

அந்த டுவிட்டர் பதிவில், “ஐயா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களே, என் தங்கச்சி திருப்பூர்ல தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறாள். அவளுக்கு இன்னைக்கு அரையாண்டு தேர்வு. கடந்த ஆண்டில் இருந்து எங்க அப்பா சரியில்லாத காரணத்தினால் பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லை. அதனால் பள்ளியில் இருந்து தேர்வுக்கான லிங்க்கை அனுப்பவில்லை.

தங்கைக்கு பாடமும் நடத்தப்படவில்லை. தேர்வு லிங்கையும் அனுப்பவில்லை. இதனால், இன்று தேர்வு எழுத முடியாமல் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறாள். அரசு பள்ளியில் சேர்க்கலாம்னு பார்த்தால் கட்டணம் செலுத்தாமல் ஜிசி தர மாட்டிங்கராங்க.. இதற்கு நீங்கள்தான் தீர்வு சொல்ல வேண்டும், ஐயா” எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஹரியின் இந்த டுவிட்டர் பதிவிற்கு திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் பதிலளித்ததுடன், நடவடிக்கையும் எடுத்துள்ளார். அவரது கோரிக்கை டுவிட்டை குறிப்பிட்டு, மாணவிக்கு தேர்வுக்கான லிங்க் கிடைத்து விட்டது, என ஆட்சியர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு விஜய் ரசிகரான ஹரி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

முதல்வருக்கு வரும் கோரிக்கைகள் எப்படியெல்லாம் தீர்க்கப்படுகிறது என்பதற்கு உதாரணம்தான் விஜய் ரசிகரின் குறை தீர்ப்பு என்கிறார்கள்.