பாமக இடம்பெறும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெறாதா.? தி.மு.க. கூட்டணியில் கொந்தளிப்பு.

தி.மு.க கூட்டணியில் பா.ம.க.வை இடம்பெறச் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதையடுத்தே ‘ பாமக இடம்பெறும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெறாது’ என்று திருமாவளவன் பேசியதாக சொல்லப்படுகிறது.


விடுதலைச் சிறுத்தைகளைக் கூட்டணியில் வைத்திருப்பதால் கொங்கு பகுதியில் ஏராளமான வாக்குகளை இழக்கவேண்டியிருக்கிறது என்பதுதான் பெரும்பாலான திமுக நிர்வாகிகள் கருத்து. ஸ்டாலினுக்கும் தனிப்பட்ட ரீதியில் விடுதலைச் சிறுத்தைகள் மீதோ, திருமாவளவன் மீதோ பெரிதாக அபிமானம் கிடையாது. 

இந்த நிலையில், திமுகவின் புதிய பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகனுக்கு, பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்கிற ஆசை நீண்ட காலமாகவே உண்டு. கடந்த காலங்களில் இது தொடர்பாக இவர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆனாலும் பாமக தலைமையுடன் துரைமுருகன் தொடர்ந்து நெருக்கம் பாராட்டி வருகிறார்.

பா.ம.க.வை உள்ளே கொண்டுவர வேண்டும் என்றால் விடுதலை சிறுத்தைகள் வெளியேற வேண்டும் என்பதுதான் நிலைமை. அதனால், ’‘நாலைஞ்சி சீட் கொடுத்து கூட்டணியில் இருக்கச் சொல்வோம். மீறிப் போனால் போகட்டும்’ என்று துரைமுருகன் ஸ்கெட்ச் போட்டு கொடுத்திருக்கிறார்.

இந்த விஷயம் வெளியே தெரிந்துதான், பா.ம.க. இடம் பெறும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இடம் பெறாது என்று முன்கூட்டியே திருமாவளவன் கூறியதாக பேசப்படுகிறது.

நீண்ட நாள் நண்பனா அல்லது திடீர் தோழனா என்பதை ஸ்டாலின் முடிவெடுக்க வேண்டிய நிலை.