வெளிநாட்டில் வாழும் தமிழர்களை எப்போது அழைத்துவருவீர்கள்..? அரசுகளுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் போராட்ட அறிவிப்பு.

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அசட்டையாக இருக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் உடனடிநிவாரணம் வழங்கவும் வலியுறுத்தி இணையவழி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.


புலம்பெயர் தொழிலாளர்க்ள் பிரச்னைகள் குறித்து எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டிய பின்னரும் மத்திய, மாநில அரசுகள் போதிய அக்கறை காட்டாதது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தற்போது உச்சநீதிமன்றம் தன்னிச்சையாக இப்பிரச்சினையை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. மத்திய மாநில அரசுகளின் மெத்தனத்தைச் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ்நாட்டிலும் உயர்நீதிமன்றம் தமிழகஅரசின் அலட்சியத்தை வெட்கக்கேடு என சுட்டிக்காட்டியுள்ளது. மத்திய மாநில அரசுகளின் இத்தகைய மக்கள்விரோத அணுகு முறைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து இதுவரை தமிழ்நாட்டுக்குத் திரும்பியிருக்கும்- இன்னும் திரும்பிக்கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் துயர்துடைக்க குடும்பம் ஒவ்வொன்றுக்கும் உடனடியாக 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம். 

அத்துடன், தமிழகத்திலுள்ள பிறமாநிலத் தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு விரைந்து அனுப்புவதற்கு உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். இதற்காக 31ஆம்தேதி தமிழ்நாடு முழுவதும் விசிக சார்பில் இணையவழி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

தமிழ்நாட்டைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களில் 25 விழுக்காட்டினர் கூட இன்னும் தாயகம் திரும்பவில்லை. அவர்களை ஊருக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு அலட்சியம் காட்டிவருகிறது. ஊருக்குத் திரும்பியவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை நிவாரணம் எதையும் அறிவிக்கவில்லை.

வளைகுடா நாடுகளில் இலட்சக்கணக்கான தமிழ்த் தொழிலாளர்கள் மாட்டிக் கொண்டுள்ளனர். அவர்களெல்லாம் எப்போது இங்கே அழைத்து வரப்படுவார்கள் என்பது இதுவரை தெளிவாகவில்லை. பிற மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் சிக்கித் தவிப்பவர்களை விரைந்து சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும். அப்படி அழைத்து வரப்படும் நபர்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம். 

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 31 ஆம் தேதி காலை 11 மணிக்கு தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இணையவழி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.