நெடுமாறன் செய்வது சரிதானா..? பாயும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு.

திமுக தலைவர் ஸ்டாலினைக் கண்டித்து நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், நெடுமாறனின் உண்மைத்தன்மையை புரிந்துகொள்ளலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.


கிராமசபைக்கூட்டத்தை அரசின் தடையை மீறி நடத்தியது தான் அய்யா நெடுமாறன் அவர்களின் வருத்தம் என புரிந்து கொள்ளலாம். அவரது அறிக்கையில், கிராம சபைக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து எந்த கேள்வியையும் தமிழக அரசை நோக்கி எழுப்பவில்லை. உள்ளாட்சி அமைப்புகளின் சனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் அதிமுக அரசின் உள்நோக்கத்தை அய்யா நெடுமாறன் அவர்கள் கண்டிக்கவுமில்லை. மாறாக,சனநாயகத்தைக் காக்க களமாடி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை கண்டித்து அவசர அவசரமாக அறிக்கை விடுத்துள்ளார்.

கொரானா காலத்தில் டாஸ்மாக் திறப்பு, அதிமுக பொதுக்குழுக்கூட்டம், முதல்வரின் ஆய்வுக்கூட்டங்கள், விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் ( தடையை மீறி) கந்த சஷ்டி முழக்கங்களுடன் பாஜக கும்பலின் போராட்டங்கள் இப்படி எத்தனை எத்தனையோ தமிழகத்தில் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. 

அப்போதெல்லாம் பரவாத கொரானா கிராம சபைக்கூட்டம் நடத்தினால் பரவி விடுமா? கிராம சபைக்கூட்டம் நடத்தினால் தான் உள்ளூர் அளவிலான பிரச்சனைகள், தேவைகள் குறித்து விவாதிக்க முடியும். அது ஒன்று தான் கிராமங்களின் சனநாயகம். அப்படிப்பட்ட சனநாயகத்துக்கு முதல்வர் தடை விதித்திருப்பது சனநாயகத்துக்கு எதிரானது மட்டுமல்ல; சர்வதிகாரப்போக்காகும். இவற்றையெல்லாம் கண்டிக்க முன்வராத அய்யா நெடுமாறன் அவர்கள் திமுகவை மட்டும் கண்டிப்பது ஏன்?

எல்லாம் திமுக மீதான பழம்பகை. திமுக தலைவர் சமத்துவப்பெரியார் கலைஞர் அவர்கள் இறந்து போன பிறகும் அவர் மீதான வன்மத்தை அவரது மகன் மீதும் திணிப்பது தான் முதிர்ச்சியான-ஆரோக்கியமான அரசியலா? தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய அரசியலின் மூத்த தலைவராக இருப்பவர் அய்யா நெடுமாறன் அவர்கள் தான். தமிழ்த்தேசிய அரசியலை வளர்த்தெடுக்க, தமிழ்த்தேசியவாதிகளை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தாமல் வாழ்நாள் முழுக்க திமுக மீதான வெறுப்பரசியலை கட்டமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். 

இன்றைய சூழலில் ஆளும் பாஜக தமிழ்நாட்டின் உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறித்து வருகிறது. அது குறித்து அய்யாவுக்கு எந்த கவலையும் இல்லை. மின்சார திருத்த சட்டமாகட்டும், விவசாயிகள் திருத்த சட்டமாகட்டும் அத்தனையும் மாநில உரிமைகளை பறிப்பது தான். அப்படிப்பட்ட விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை எதிர்த்து தான் கிராம சபைகளில் தீர்மானம் இயற்ற திமுக தலைவர் கோரிக்கை விடுத்திருந்தார்.அதை தெரிந்து கொண்டு தான் அதிமுக அரசு இப்படியான தடை விதித்திருப்பதை நாடறியும். அந்த சதி அய்யாவுக்கு தெரியாதா?

மாநில உரிமைகளை பறிகொடுத்து வரும் அதிமுக அரசை கண்டிக்காமல்,மாநில உரிமைகளை பாதுகாக்க போராடும் திமுகவை மட்டும் கண்டிப்பது ஏன்? தமிழ்நாட்டின் அடையாளத்தை சிதைக்க முயற்சி செய்யும் பாஜகவுக்கு அடிபணிந்து சேவகம் செய்யும் அதிமுக வுக்கு ஆதரவாக அய்யா நெடுமாறன் செயல்படுவது தவறல்ல; அதற்காக தமிழ்நாட்டு உரிமைகளை பாதுகாக்க போராடும் திமுகவை கண்டிப்பது சரியா அய்யா?

கலைஞர் மீதான பழம்பகையை விட்டு விட்டு திமுக வெறுப்பு - அதிமுக விருப்பு என அரசியல் செய்யாமல் தமிழ்த்தேசிய மீட்சிக்கான அரசியலை செய்ய இளைஞர்களுக்கு வழிகாட்டுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார் வன்னி அரசு.