சித்ராபூர் என்ற கிராமத்தில் நான்கு இளைஞர்கள் இருந்தனர்; அவர்கள் வறுமையில் வாடினர்; வழி தெரியாது ஏங்கினர். ஒரு சாமியாரைக் கண்டனர். அவர் ஒரு மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்து காளி தேவியைப் பூஜியுங்கள் என்றார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.
கடைசியில் என்ன தான் கிடைத்தது? ரொம்ப சுவாரஸ்யமான குட்டி கதை படிச்சு உங்க குழந்தைக்கு சொல்லுங்க!
காளி தேவி பிரசன்னமானாள்; அன்பர்களே! உங்கள் பக்தியை மெச்சுகிறேன். என்ன வேண்டும் ? என்று வினவினாள். அவர்கள் சொன்னார்கள்: இன்பமும் செல்வமும் வேண்டும் என்று.
அவள் உடனே நான்கு தாயத்துகளைக் கொடுத்து இதை ஒவ்வொருவரும் தலையில் வைத்துக்கொள்ளுங்கள். வடக்கு நோக்கிச் செல்லுங்கள். ஒவ்வொருவர் தாயத்து பூமியில் விழும்போதும் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்து கிடைப்பதை எடுத்துச் செல்லுங்கள் என்றாள்.
அவர்களும் அகம் மகிழ்ந்து உளம் குளிர்ந்து வட திசை நோக்கி ஏகினர். சிறிது தொலைவு சென்றவுடன் முதலில் ஒருவன் தாயத்து விழுந்தது. அவன் தோண்டிப் பார்த்தான். அங்கே தாமிர உலோகக் கட்டிகள் நிறைய இருந்தன. முடிந்த மட்டும் மூட்டை கட்டினான். நண்பர்களே! எனக்கு பரம திருப்தி; நான் கிராமத்துக்குத் திரும்பிச் சென்று புது வாழ்வு படைப்பேன் என்றான்;
இரண்டாமவன் தலையில் இருந்த தாயத்து விழுந்தது. அவன் நிலத்தைத் தோண்டினான்; வெள்ளிக் கட்டிகள் கிடைத்தன. அவனுக்கு பரம சந்தோஷம்; நபண்பர்களிடம் விடை பெற்று சித்ராபூருக்குத் திரும்பி புது வாழ்வு வாழ்ந்தான். வெகு தொலைவு சென்றபின்னர் மூன்றாமவன் தாயத்து தரையில் விழுந்தது. அங்கே தோண்டினான். நிறைய தங்கக் கட்டிகள் இருந்தன. அவன் சொன்னான்
இதோ பார்! கொஞ்ச நேரத்தில் இருண்டு விடும்; சூரியன் மலை வாயில் விழுந்து கொண்டிருக்கிறான்; நீ முடிந்த மட்டும் உனக்கு வேண்டிய தங்கத்தை எடுத்துக் கொள்; நான் முடிந்தவரை எனக்கு வேண்டியதை எடுத்துக் கொள்கிறேன் என்றான். ஆனால் நான்காமவன் கேட்கவில்லை அவனுக்குப் பேராசை; இனியும் போனால் வைரக் கட்டிகள் கிடைக்கும் என்று எண்ணினான்.
நான்காமவன் பயணத்தைத் தொடர்ந்தான். வெகு தொலைவு சென்ற பின் தாயத்தும் தலையில் இருந்து விழுந்தது. ஆசையோடு தோண்டினான்; வெறும் இரும்புக் கட்டிகளே இருந்தன; பொழுதும் சாய்ந்தது. இரும்பைத் தூக்கிக் கொண்டு இனியும் நடக்க முடியாது என்று வெறும் கைகளோடு வழீ தெரியாமல் தட்டுத் தடுமாறி கிராமத்தை நோக்கி நடை போட்டான்.
கிராம மக்களுக்கு பேராசை பெரு நஷ்டம் என்பதை விளக்கவும் அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே; கிடைத்ததை வைத்து திருப்தியுடன் வாழக் கற்றுக்கொள் என்பதற்காக இக்கதைகயைச் சொல்லுவர்.