நான் தான் சாகப்போறேனே? 4 பேருக்கு உயிர் கொடுத்துவிட்டு மூச்சை நிறுத்திய 49 வயது ஆசிரியர்! மனதை உலுக்கும் சம்பவம்!

விபத்தில் மரணம் ஏற்பட்டாலும் உடல் உறுப்பு தானம் மூலம் 4 பேரை வாழ வைத்துள்ளார் வேலூர் மாவட்டத்தைசேர்ந்த ஆசிரியர் வாசுதேவன்.


வேலூர் மாவட்டம் கலிவர்தாங்கல் கிராமத்தில் ஆசிரியர் தம்பதி வாசுதேவன், மஞ்சுளா வசித்து வந்தனர். ஆசிரியர் வாசுதேவன் ஒடுகத்தூர் அரசுப் பள்ளியில் பணிபுரிந்துவந்தார். இவர்களுக்கு சங்கீத்குமார், தீனுபிரியா ஆகிய பிள்ளைகள் உள்ளனர். இந் நிலையில், நவம்பர் 20-ம் தேதி கார்ணாம்பட்டு அருகே வாசுதேவன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலை விபத்து ஏற்பட்டு அவர் படுகாயம் அடைந்தார்.

பின்னர் வாசுதேவன் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே ஆசிரியர் வாசுதேவனுக்கு நேற்று மாலை மூளைச்சாவு ஏற்பட இனி அவரை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். 

பின்னர் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தார் சம்மதம் தெரிவித்தனர். சிறுநீரகம் எம்.ஜி.எம் மருத்துவமனைக்கும், சிறுநீரகம் மியாட் மருத்துவமனைக்கும், கல்லீரலும் மற்றொரு சிறுநீரகமும் சி.எம்.சி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. அந்த உடல் உறுப்புகள் 4 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.

கண்களை மட்டும் எடுக்க உறவினர் சம்மதம் தெரிவிக்காததால் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ஆசிரியர் வாசுதேவனின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. ‘உடல் உறுப்புகளைத் தானம் செய்ததன் மூலம் நான்கு பேருக்கு வாழ்வு கொடுத்துவிட்டு இம்மண்ணில் ஆசிரியர் வாசுதேவன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்’ என்றால் அது மிகையல்ல.