பட்டு வேட்டி! பட்டு சட்டை! ஓடும் பேருந்தில் இளம் பெண்ணுக்கு தாலி கட்டி மாமியார் வீட்டுக்கு போன இளைஞன்!வேலூர் சம்பவம்!

சினிமாவில் வருவதுபோல ஒரு பெண்ணுக்கு தாலி கட்டிவிட்டால் தனக்கு மனைவியாகி விடுவாள் என்று குருட்டு தைரியத்தில் ஒரு தலை காதலிக்கு தாலி கட்டியவர் சிறையில் அடைக்கப்பட்டார்.


வேலூர் மாவட்டம் சான்றோர் குப்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணிடம் தன்னுடைய காதலை சொல்ல பல முறை முயற்சித்த இளைஞருக்கு தோல்வியே மிஞ்சியது. பயம் காரணமாக சொல்லாமலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வீட்டில் வேறு ஒரு நபரை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்து பெற்றோர் நிச்சயம் செய்துள்ளனர்.

இதை கேள்விபட்ட அந்த இளைஞருக்கு இடியே தலையில் விழுந்தது போல் இருந்துள்ளது. இனியும் தாமதித்தால் வேலைக்கு ஆகாது என்று கருதிய இளைஞர் நேரடியாக சென்று ஒட்டு மொத்த தைரியத்தை வரவழைத்து தன்னுடைய காதலை அந்த பெண்ணிடம் வெளிப்படுத்தி உள்ளார். பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறியவுடன் அந்த பெண் அந்த முகத்தை முன்பின் பார்த்ததுகூட கிடையாதே என்று அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் நான் உங்களை திருமணம் செய்து கொள்ள முடியாது வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையையே மணப்பேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதையடுத்து நண்பர்களின் கிறுக்குத்தனமாக ஐடியாவை கேட்டு இன்று காலை வாணியம்படி அருகே பேருந்தில் சென்றுகொண்டிருந்த ஒரு தலை காதலியை மறித்த அந்த இளைஞர் அவருக்கு கட்டாயத் தாலி கட்டி மனைவியாக்கினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கூச்சலிட பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் முறையாக திருமணம் செய்யும்போது எப்படி அச்சதை போட்டு ஆசீர்வதிப்பார்களோ அதேபோல் மாப்பிள்ளையை தங்கள் முழுப் பலத்தையும் பிரயோகித்து ஆசீர்வதித்தனர். (மக்கள் கொடுத்த உதையைத்தான் கூறினேன்). பின்னர் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வாணியம்பாடி போலீஸார் அந்த பெண்ணின் கணவரை, மன்னிக்கவும். கட்டாயத் தாலி கட்டிய அந்த இளைஞரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் பெயர் ஜெகன் என்பது தெரியவந்தது. இது ஒருபுறம் இருக்க அந்த இளைஞனால் கட்டப்பட்ட தாலியை அந்தப் பெண் கழற்றி வீசினாரா அல்லது என்ன செய்தார். சினிமாவில் வருவது போல் தாலியை கழற்றும்போது ஏதோ ஒரு சக்தி தடுக்கிறதா? என்றெல்லாம் கேள்வி கேட்க வேண்டாம்.

திருமணம் செய்து கொள்ள மறுக்கும் பெண்கள் மீது ஆசிட் வீசும் இளைஞர்களுக்கு மத்தியில் தாலி கட்டிய இளைஞரை கொஞ்சமேனும் பாராட்டியே ஆகவேண்டும். இந்த விஷயத்தில் அந்த பெண்ணின் 2வது முறையாக தாலி கட்ட ஏற்கனவே நிச்சயம் செய்த மாப்பிள்ளை சம்மதிப்பாரா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.