வேலூர் தொகுதி முடிவையே புரட்டிப் போட்ட அந்த ஒரு சுற்று! கதிர் ஆனந்த் வெற்றி துவங்கியது இப்படித்தான்!

வேலூர் தொகுதி தேர்தல் முடிவுகளையே ஒரே ஒரு சுற்று தான் புரட்டிப் போட்டது, அதன் பிறகு தான் கதிர் ஆனந்த் வெற்றி முகமாக மாற ஆரம்பித்தார்.


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வேலூர் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் பத்து லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இவை 21 சுற்றுகளாக எண்ணப்பட்டன.

காலை எட்டு மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. துவக்கம் முதலே ஏசி சண்முகம் தான் முன்னிலையில் இருந்தார். சுற்று வாரியாக வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்தன. அதன்படி 11 சுற்றுகள் வரை ஏசி சண்முகம் முன்னிலையில் இருந்தார்.

10வது சுற்றில் முன்னிலை 3 ஆயிரம் வாக்குகளாக குறைந்திருந்தது. இந்த நிலையில் தான் 11வது சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த சுற்றில் மட்டும் கதிர் ஆனந்த் 29187 வாக்குகள் பெற்றார். அதே சமயம் ஏசி சண்முகம் அந்த சுற்றில் வெறும் 22190 வாக்குகள் தான் பெற்றார்.

இதன் பிறகு கதிர் ஆனந்த் முன்னிலை பெற ஆரம்பித்தார். 12வது சுற்றிலும் கதிர் ஆனந்த் சுமார் 29 ஆயிரம் வாக்குகளை பெற ஏசி சண்முகம் வெறும் 23 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றார்.

இதன் பிறகு 13, 14, 15, 16, 17, 18, 20 மற்றும் 21 ஆகிய சுற்றுகளிலும் கூட ஏசி சண்முகம் தான் கதிர் ஆனந்தை விட அதிக வாக்குகளை பெற்றார். ஆனால் 11 மற்றும் 12வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் பெற்ற சுமார் 12 ஆயிரம் வாக்குகள் எனும் வித்தியாசம் தான் கதிர் ஆனந்தை காப்பாற்றியது. 

அந்த இரண்டு சுற்றுகளிலும் அந்த அளவிற்கு சுமார் 12 ஆயிரம் என லீடிங் கிடைத்திருக்காவிட்டால் தற்போது வேலூர் எம்பியாக கதிர் ஆனந்த் ஆகியிருக்க முடியாது. அந்த வகையில் 11வது சுற்று வாக்கு எண்ணிக்கை தான் வேலூர் தேர்தல் முடிவுகளையே புரட்டி போட்டுள்ளது.