ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் சாலையில் பழுதாகி நின்ற 300 பைக்குகள்! குடியாத்தம் பரபரப்பு! அதிர வைத்த காரணம்!

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கலப்பட பெட்ரோல் போட்டதால் வாகனங்கள் பழுதாகிவிட்டதாக வாடிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பழுதான வாகனங்களை சரி செய்து கொடுப்பதாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.


நெல்லூர்பேட்டையிலிருந்து பேரணாம்பட்டு செல்லும் சாலையில் லீலா விநோதன் ஏஜன்சிக்கு சொந்தமான இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பங்க்கில் கலப்பட பெட்ரோல் போடுவதாக அடிக்கடி புகார்கள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று இந்த பெட்ரோல் பங்க்கில் எரிபொருள் நிரப்பிய சுமார் 300 வாகனங்கள் பழுதடைந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

பெட்ரோல் போட்டுக்கொண்டு கொஞ்ச தூரம் சென்ற உடனே வாகனம் நின்றுவிட்டதால், வாகன ஓட்டிகள் மெக்கானிக் கடைக்கு வண்டியை எடுத்து சென்றனர். அதை பார்த்த மெக்கானிக் பெட்ரோலில் கலப்படம் உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை கூறினார். இதனால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் பங்க்கை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், டீசல் ஏற்றிவந்த டேங்கர் லாரி, பெட்ரோல் நிரப்ப வேண்டிய டேங்க்கில் டீசலை நிரப்பிவிட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இது தவறுதலாக நடைபெற்றது என கூறினர். ஆனாலும் பிரச்சனை பெரிதாக, வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பில்லாமல் அவர்களது வாகனங்களை பழுது நீக்கி தருவதாக ஒப்புக்கொண்டனர்.

ஆனால் இதுகுறித்து வாடிக்கையாளர் ஒருவர், வேண்டுமென்றே பொய் சொல்கிறார்கள் என்றும் மண்ணெண்ணெய் அடிக்கடி இவர்கள் கலந்து விடுவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் ஒருமுறையாவது நடவடிக்கை எடுத்தால்தான் திருந்துவார்கள் என தெரிவித்தார். பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தையை ஏற்று வாகன ஓட்டிகள் சமரசமடைந்தனர். பழுதான வாகனங்களையும் பங்க் ஊழியர்களே சரிசெய்துகொடுத்தார்கள்.