கட்டு மஸ்தான உடல்..! காக்கி சீருடை..! தொழில் அதிபர்கள் தான் டார்கெட்! காட்பாடி பணக்காரர்களை அதிர வைத்த 2 இளைஞர்கள்!

தங்களை சிபிஐ அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்ட 2 இளைஞர்கள் பல தொழிலதிபர்களிடம் பணம் பறித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.


வேலூர் மாவட்டம் காட்பாடியில் விருதம்பட்டு போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை மடக்கி ஓட்டுநர் உரிமம் கேட்டுள்ளனர். அதற்கு இளைஞர்கள், நாங்கள் சி.பி.ஐ அதிகாரிகள், எங்களிடமே கேள்வி கேட்கிறீர்களா என கேட்டு, அடையாள அட்டைகளைக் காண்பித்து மிரட்டி உள்ளனர். (பொதுவாக உண்மையான சிபிஐ அதிகாரிகளாக இருந்தால் கூட முறையாக பதில் அளித்துவிட்டு செல்வார்கள்.) 

அவர்களுடையை வாகனத்தில் ராணுவம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அதனால் இருவரையும் பிடித்து போலீசார் தங்கள் பாஷையில் விசாரித்தனர். இதையடுத்து அவர்கள் விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த மதீன், கழிஞ்சூரை சேர்ந்த ஹரிஹரன் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் தங்களை சி.பி.ஐ அதிகாரிகள் எனக்கூறி பல இடங்களில் பணம் பறித்ததும் தெரியவந்தது. 

பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சி.பி.ஐ-யில் ஹரிஹரன் உதவி ஆணையராகவும் மதீன் சப்-இன்ஸ்பெக்டராகவும் மிடுக்கான தோற்றத்துடன் பணக்காரர்கள், தொழிலதிபர்களின் வீடுகளுக்கு ரெய்டு செய்துள்ளனர். இவர்களை நம்பி பலரும், பயந்துபோய் பணம் கொடுத்துள்ளனர். சமீபத்தில், வட்டார போக்குவரத்து அலுவலர் வாகனத்தை மடக்கி உரிமங்களைக் கேட்டபோது அவரையே மிரட்டியிருக்கிறார்கள்.

இதையடுத்து இவர்கள் வீட்டில் சோதனை செய்த போலீசார், காவல் சீருடைகள், ரூ.4.70 லட்சம் பணம், முக்கிய ஆவணங்கள், கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கிடைக்கும் பணத்தில் சொந்தமாக தொழில் செய்து முன்னேறாமல் உல்லாசமாக செலவு செய்து வந்துள்ளனர்.

இதுகுறித்து சிலர் தெரிவித்தபோது எல்லோருமே அரசாங்கத்தை ஏமாற்றாமல் முறையாக வரி செலுத்துபவர்களாக இருந்தால் உண்மையான சிபிஐ அதிகாரிகள் வந்தால் கூட பயப்படத் தேவையில்லை என தெரிவித்தனர்.