வேலூரில் திருப்புமுனையை ஏற்படுத்திய வாணியம்பாடி! எடப்பாடி தலையில் துண்டை போட்டு அனுப்பிய பரிதாபம்!

வேலூர் தேர்தல் முடிவை அப்படியே திமுக பக்கம் சாதகமாக மாற்றியதில் வாணியம்பாடிக்கு பெரும் பங்கு உள்ளது.


வேலூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே அதிமுக கேம்ப் மிகவும் உற்சாகத்தில் இருந்தது. அதிலும் தபால் வாக்குகளில் கூட அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் தான் அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் இருந்தார்.

இதனால் எளிதாக ஏசி சண்முகம் வேலூரில் வென்றுவிடுவார் என்று அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வாக்குகள் பாதி எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் ஏசி சண்முகம் முன்னிலையில் இருந்ததால் அதிமுக தலைமை கழகம் முன்பு பட்டாசுகள் கொளுத்தப்பட்டன.

இனிப்புகள் கூட வழங்கப்பட்டன. ஆனால் 12வது சுற்றுக்கு பிறகு நிலவரம் அப்படியே தலைகீழானாது. 12வது சுற்றில் சுமார் 7 ஆயிரம் வாக்குகள் லீடிங் சென்ற கதிர் ஆனந்த் அதனை அப்படியே மெயின்டெய்ன் செய்து கடைசியில் வெற்றியும் பெற்றார்.

இதற்கு முழு முதல் காரணம் வாணியம்பாடி தொகுதி தான். மொத்தம் வேலூரில் ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் துவக்கத்தில் இருந்தே வாணியம்பாடி தான் திமுகவிற்கு கை கொடுத்து வந்தது. அதன் பிறகு வேலூர் மற்றும் ஆம்பூர் தொகுதிகளும் திமுக லீடிங்கிற்கு உதவின.

அதே சமயம் கேவி குப்பம், அணைக்கட்டு மற்றும் குடியாத்தம் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் கொடி பறந்தது. இதனால் கடைசி சுற்று வரை நெக் டூ நெக்காக வேலூர் தேர்தல் முடிவுகள் சென்றன. ஆனால் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் இறுதியில் கதிர் ஆனந்த் வென்றார்.

கேவி குப்பம், அணைக்கட்டு மற்றும் குடியாத்தம் தொகுதியில் அதிகப்படியான வாக்குகளை பெற்ற ஏசி சண்முகம் வேலூர் மற்றும் ஆம்பூர் தொகுதிகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தான் பின்னடைவு கிடைத்தது. ஆனால் வாணியம்பாடியில் மட்டும் திமுக வேட்பாளர் அதிமுக வேட்பாளரை விட சுமார் 20 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றார்.

இந்த 20 ஆயிரம் வாக்குகள் மட்டும் கிடைக்கவில்லை என்றால் கதிர் ஆனந்த் நிச்சயமாக வென்று இருக்க முடியாது. அதே சமயம் வாணியம்பாடியில் ஏசி சண்முகம் அதிக வாக்குகளை பெற்று இருந்தால் அவர் எளிதாக வென்று இருப்பார். அந்த வகையில் அதிமுகவின் வெற்றியை தடுத்து நிறுத்தியது வாணியம்பாடி தான்.

அந்த வகையில் இந்த தேர்தலில் நூலிலையில் அதிமுகவிற்கு தோல்வியை கொடுத்த வேலூர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்விலும் ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தலில் மட்டும் அதிமுக வென்று இருந்தால் அது அதிமுக தலைமைக்கான அங்கீகாரமாக பார்க்கப்பட்டிருக்கும். அதனை தடுத்து நிறுத்தி எடப்பாடி தலையில் துண்டை போட்டு அனுப்பியுள்ளது வாணியம்பாடி.