வேலூரில் மு.க.ஸ்டாலின் மானம் காத்த முஸ்லீம்கள்! கை கொடுத்த வாணியம்பாடி!

வேலூரில் நீடித்த இழுபறி கடைசியில் திமுகவிற்கு சாதகமாக வந்தாலும் அங்குள்ள முஸ்லீம்கள் தான் ஸ்டாலின் மானத்தை காப்பாற்றியுள்ளனர்.


கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக போட்டியிட்ட அத்தனை தொகுதியிலும் வெற்றி வாகை சூடியது. தேனியில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் ஒபிஎஸ் மகனிடம் தோல்வியை தழுவினார். மேலும் அனைத்து தொகுதிகளிலும் வாக்கு வித்தியாசம் பல லட்சங்களை தாண்டியது.

வலுவான கூட்டணி அமைத்தும் அதிமுகவால் திமுக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளில் பாதியைக் கூட முடியவில்லை. இதற்கெல்லாம் காரணம் ஸ்டாலின் தலைமை தான் என்று திமுகவினர் பெருமை பேசினர். மக்கள் ஸ்டாலினை ஒரு மாஸ் தலைவராக ஏற்றுக் கொண்டதாக பிரச்சாரம் செய்தனர்.

கலைஞர், ஜெயலலிதாவிற்கு பிறகு ஏற்பட்ட வெற்றிடம் ஸ்டாலின் மூலமாக நிரம்பிவிட்டது என்றெல்லாம் கதை கதையாக அளந்தார்கள். இநத் நிலையில் வேலூர் தொகுதிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வென்றால் தான் நாடாளுமன்ற தேர்லில் பெற்ற வெற்றி ருசிக்கும் என்கிற உண்மை ஸ்டாலினுக்கு தெரியும்.

அந்த வகையில் பரபரப்பாக தற்போது வேலூர் தொகுதிக்கான தேர்தல் நடந்து முடிந்து கதிர் ஆனந்தும் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் வாக்கு வித்தியாசம் தான் மிகவும் சொற்பம். மேலும் முதல் 11 சுற்றுகள் வரை திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பின்னடைவில் தான் இருந்தார்.

ஒரு கட்டத்தில் கதிர் ஆனந்த் – ஏசி சண்முகம் இடையிலான வாக்கு வித்தியாசம் 17 ஆயிரம் வாக்குகளை கடந்தது. இதனால் ஏசி சண்முகம் வேலூர் எம்பி யாகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் 12வது சுற்றில் இருந்து திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற ஆரம்பித்தார்.

இதற்கான காரணம் வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் வேலூர் எனும் மூன்று பகுதிகள் தான். இங்கு முஸ்லீம்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் கொத்து கொத்தாக கதிர் ஆனந்த் வாக்குகளை அள்ளினார். உதாரணத்திற்கு வாணியம்பாடியில் 12வது சுற்றில் கதிர் ஆனந்த் 7 ஆயிரம் வாக்குகளை பெற்றார். 

ஆனால் அங்கு ஏசி சண்முகம் சுமார் 1500 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இதே நிலை தான் ஆம்பூர் மற்றும் வேலூர் தொகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகளில் காணப்பட்டது. முஸ்லீம்கள் ஒட்டு மொத்தமாக வாக்குகளை திமுகவிற்கு அளித்தது தான் கதிர் ஆனந்த் வெற்றி பெற காரணமாகிவிட்டது.

அந்த வகையில் வேலூரில் திமுக தோல்வி அடையாமல் காப்பாற்றியது முஸ்லீம்கள் தான். மேலும் இந்த தேர்தலில் மட்டும் திமுக தோற்றிருந்தால் ஸ்டாலின் தலைமை குறித்த கேள்வி மீண்டும் எழுந்திருக்கும். ஆனால் அதற்கு வழியில்லாமல் அவரது மானத்தை வேலூர் தொகுதி முஸ்லீம்கள் காத்துள்ளனர்.