நோ அசைவம்! ஒன்லி சைவம்! ஒரு கிராமமே மாமிசத்தை ஒதுக்கி வைத்த விநோதம்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த வாடிமனைப்பட்டி கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக யாரும் அசைவம் சாப்பிடுவது இல்லை என்பதால் இது சைவ கிராமம் என அழைக்கப்படுகிறது.


கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் வள்ளலாரின் சன்மார்க்க நெறியை கடைபிடிப்பதால் யாரும் அசைவ உணவுகளைச் சாப்பிடுவதில்லை. ஆடு கோழிகளை வளர்ப்பதும் இல்லை.வெளியூர்களில் இருந்து திருமணமாகி மருமகள்களாக வருபவர்களும் சைவத்துக்கு மாறிவிடுகின்றனர். 

இங்கிருந்து வெளியூர்களுக்குத் திருமணமாகிச் செல்லும் பெண்களும் கணவன் வீட்டில் அசைவ உணவு சமைக்கப்பட்டாலும் தங்களுக்காக தனியாக சைவ உணவு சமைத்து சாப்பிடுவதாகக் கூறுகின்றனர்.

இந்த ஊர் இளைஞர்கள் டாஸ்மாக் கடைகளைத் தேடிச் செல்வதில்லை. வெளிநாட்டில் வேலை செய்பவர்களும் இந்த கொள்கையை உறுதியாக கடைப்பிடிப்பதாகக் கூறுகின்றனர். கருத்து வேறுபாட்டால், சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும், அடிதடி வெட்டுக்குத்து சம்பவங்கள் நடப்பதில்லை என்றும் காவல் நிலையப் படி ஏறி, இறங்குவதில்லை என்றும் பெருமையுடன் கூறுகின்றனர்  இவர்கள்

பேண்டு வாத்தியங்களுடன் ஆடம்பரத் திருமணங்கள், ஹோமங்கள், மந்திரங்கள் போன்றவற்றுக்கும் இடமில்லை. சன்மார்க்க முறைப்படி திருப்புகழ் பாடி எளிய முறையில் திருமணங்கள் நடைபெறுகின்றன.