இந்தியை எடுக்கலைன்னா கிளர்ச்சி வெடிக்கும். மா.பா.பாண்டியராஜனுக்கு வீரமணி எச்சரிக்கை!

சென்னை தரமணியில் இயங்கும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிக்க வசதி செய்து கொடுப்பது - தமிழ்நாடு அரசு பின்பற்றும் இருமொழிக் கொள்கைக்கு விரோதமானது.


இந்தி கற்க ஏற்பாடு செய்வதை விலக்கிக் கொள்ளாவிட்டால் கிளர்ச்சி வெடிக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறியிருக்கிறார். தமிழ்நாடு அரசின் சார்பில் பல ஆண்டுகாலமாக சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிதாக ஒரு ஏற்பாட்டினை தமிழ் வளர்ச்சித் துறையின் அமைச்சராக உள்ள திரு.மா.பாண்டியராஜன் அவர்கள் செய்துள்ளதாகக் கூறி,

அறிஞர் அண்ணா ஆட்சிக் காலத்திலிருந்து தொடர்ந்துவரும் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையின் வேரில் வெந்நீர் ஊற்றி, மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அரசின் ‘சடகோபம்‘ சாத்தப்படத் துடியாய்த் துடிக்கிறார் போலும்!

1967ல் அண்ணா ஆட்சிக்கு வந்தபோது அவர் எந்தக் கட்சியில் இருந்தார் என்று நமக்குத் தெரியாது; ஆனால், அவர் மாணவப் பருவத்தில் இருந்திருக்கக் கூடும். ஒரு அமைச்சரின் வேலை ஒரு அரசு திட்டவட்டமாகக் கடந்த 50 ஆண்டுகளுக்குமேலாகக் கடைபிடித்துவரும் இருமொழிக் - கொள்கையை மாற்றிட - டில்லியைத் திருப்தி செய்து, அவாளின் புன்னகையைப் பெற இப்படி தமிழ்நாட்டின் மாநில உரிமையை இழக்கலாமா?

மற்றவர்கள் அல்லது நம் மாணவர்கள் விரும்பும் மொழியைக் கற்றுக்கொடுக்க ஹிந்திப் பிரச்சார சபா போன்ற அமைப்புகள் இருக்கும்போது, தமிழ்நாடு அரசு சார்பாக உள்ள நிறுவனம் - அதன் பெயரையே மாற்றிடுவது போன்று - பன்மொழி கற்றுத் தரும் பயிற்சிக்காகத் தொடங்கப்பட்டதோ, நடைபெறுவதோ அல்ல. தமிழை செம்மொழியாக்கிட அரும்பாடுபட்ட கலைஞர் முயற்சியால், மைசூரில் இருந்த மத்திய அரசின் அந்த நிறுவனம், தமிழ்நாட்டிற்கு மாற்றப்பட்டது. 

இன்று அச்செம்மொழி நிறுவனத்தினை - திட்டமிட்டே அலட்சியப்படுத்தி - அதில் எந்த உருப்படியான ஆய்வும் நடத்தப்படாமல், ‘தினக்கூலி’ நிறுவனம்போல குற்றுயிரும் குலை உயிருமாக நடத்துவதை மாற்றி அதனை மேம்படுத்துவதற்கு, இவரது அமைச்சகத்தின் தனிக் கவனம் செலுத்தப்படவேண்டியது தலையாய கடமை அல்லவா?

அதை விட்டுவிட்டு, ‘‘கிடப்பது கிடக்கட்டும், கிழவனைத் தூக்கி மணையில் வை’’ என்பதுபோல, ஹிந்திக்கு நடை பாவாடை விரித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் என்பதன் பெயர், பொருள், பணி எல்லாவற்றையும் மாற்றிட முயலுவதா? பல மொழிகள் ஒப்பீடு செய்வது வேறு; பன்மொழி பயிற்சி நிலையமாக்கி, அதன், தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் அடிப்படையிலே ஓட்டை போட்டு, அதனை திசை திருப்புவது எவ்வகையிலும் நியாயமல்ல.

இன்னமும் தமிழ் கற்காத, தமிழில் பேசத் தெரியாத பல ஆட்சி அதிகாரிகள் முதல் பாமரர் வரை பலரும் உண்டு. தமிழைப் பரப்பும் பணியில் ஆய்வு செய்யும் வேலை - முழுமையாக ஈடுபட வேண்டியதுதான் இதன் நோக்கம், இலக்கு.

அதை விடுத்து, இப்போது இந்திய மொழி, உலக மொழி என்று ஆரம்பத்தில் ‘அடணா’ பாடுவது, அடுத்தகட்டமாக ஏதாவது இந்திய மொழி என்ற இடத்தில் சமஸ்கிருதம் கற்றுக்கொள்ளலாம் என்பதற்கு இது முன்னுரையோ - உரைப்பாயிரமோ என்ற அய்யமும் நமக்கு எழுகிறது! மாணவர்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கவும்,

தமிழ்நாட்டுக்குள் பறக்கும் பயணியர் விமானங்களில் தமிழ் அறிவிப்புகள் ஒலிக்கவும், உலகப் பொது நூலாம் திருக்குறளை தமிழ்கூறும் நல்லுலகம் மட்டுமல்ல, மற்ற நாடுகளுக்கும் பரப்பும் பணியில் ஈடுபடவேண்டிய ஓர் ஆய்வு நிறுவனம், இப்படி திசை திருப்பல்களுக்கு ஆளாகி இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்று கூறியிருக்கிறார் வீரமணி.