ரஜினியின் சிபாரிசு என்று செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு தகுதியில்லாத ஒருவரை நியமனம் செய்தது ஏன்? - கி.வீரமணி

செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு தகுதியுள்ள பேராசிரியர் தாமோதரனை தேர்வு செய்யாமல், ரஜினியின் சிபாரிசு என்று தகுதியில்லாத ஒருவரை நியமனம் செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.


கிட்டத்தட்ட ஒரு தனிப் பல்கலைக் கழகம் போன்று இயங்கிடவேண்டிய செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு, கடந்த 13 ஆண்டுகளாக நிரந்தரமாக யாரும் நியமிக்கப்படவில்லை. அதனால் ஐ.ஐ.டி. எனும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் அதிகாரிகளே (தமிழுக்கும், அவர்களுக்கும் காத தூரம்) பொறுப்பு இயக்குநர் பதவியை வகித்து வந்தனர். நாம் பலமுறை இதனைச் சுட்டிக்காட்டி, அறிக்கை விடுத்து, ஆர்ப்பாட்டங்களும் செய்துள்ளோம். இப்பொழுது தேசிய தொழில்நுட்பக் கழகப் (என்.அய்.டி.) பேராசிரியர் முனைவர் பழனிவேல் என்பவர் பொறுப்பில் உள்ளார்!

2014 இல் இயக்குநர் பதவிக்காக செம்மொழி நிறுவனத்தின் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. முனைவர் மு.பாலசுப்பிரமணியன் (தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்) தேர்வுக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இயக்குநராக நியமனம் செய்யப்படவில்லை. தொடர் கோரிக்கைகள் கல்வியாளர்களால் வைக்கப்பட்ட காரணத்தால், மீண்டும் அப்பதவிக்கு விளம்பரம் செய்யப்பட்டது.

காவிக் கட்சியின் ஆதரவாளராகவும், அனுதாபியாகவும் இருப்பதால்... இவ்வாண்டு ஜூன் மாதம் செம்மொழி மத்திய இயக்குநராக முனைவர் சந்திரசேகரன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக செய்தி வந்துள்ளது.

முனைவர் சந்திரசேகரன் அவர்களுடன் நேர்காணலுக்குச் சென்றவர்களில் குறிப்பிடத்தக்க தமிழ்ப் பேராசிரியர்கள் தாமோதரன் (இந்திய மொழிகள் மய்யம், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம், புதுடில்லி) மற்றும் முனைவர் செல்வகுமார் (இணைப் பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை) ஆகிய மூவர்.

மூவரில் முனைவர் தாமோதரன் ஒருவரே பேராசிரியர் பணியில் இருப்பவர் ஆவார். இவருக்கு இத்தகைய சிறப்புத் தகுதி இருந்தும், இவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இப்பதவிக்குரிய மற்ற தகுதிகள் இருந்தும், இவர் தேர்வாகாததற்கு முழு காரணம், இவர் தந்தை பெரியார்பற்றி ஒரு நூல் எழுதியுள்ளார் என்பதாக இருக்குமோ என்றும் கல்வியாளர்கள் வட்டாரத்தில் பேசப்படுகின்றது.

துணைப் பேராசிரியராக மட்டும் பணிபுரியும் சந்திரசேகர் என்பவர் எப்படி இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது ஆய்வாளர்கள் - பேராசிரியர்கள் வட்டாரத்தில் புரியாத பெரும் புதிராக இருக்கிறது. காவிக் கட்சியின் கண்ணோட்டமோ என்றும் பேசப்படுகிறது; காரணம், இவர் பேராசிரியரோ, துணைத் தலைவரோ இல்லை. அதோடு அனுபவமும் மிகவும் குறைவே!

இது முற்றிலும் விதிகளைப் புறந்தள்ளிய அப்பட்டமான சார்புநிலை நியமனமாகவே நடந்துள்ளது என்று பல பேராசிரியர்களும், கல்வியாளர்களும் குமுறுகின்றனர்.

முழுத் தகுதி உள்ள பேராசிரியர் தாமோதரன் அவர்கள், பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் படித்தவர். காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம், சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியவர். 4 ஆண்டுகளுக்கு முன்பு டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நேர்முகத் தேர்வின்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இவ்வளவு தகுதிகள் - அனுபவம் உள்ள ஒருவரை விட்டுவிட்டு, சாதாரண ஒரு உதவிப் பேராசிரியரை - விதிகளையெல்லாம் புறந்தள்ளி -தேர்வு செய்தது எவ்வகையில் நியாயமாகும்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ரஜினியின் சிபாரிசு காரணமாகவே, சந்திரசேகரை மத்திய அமைச்ச நியமனம் செய்திருக்கிறார் என்று சொல்லப்படும் நிலையில், அதுகுறித்து வீரமணி எதுவும் பேசவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.