இராம.கோபாலனுடன் மோதுகிறார் வீரமணி! பாகிஸ்தானை இந்தியாவுடன் இணைக்க முடியுமா?

பாகிஸ்தானை இந்தியாவுடன் இணைக்கவேண்டும் என்று ராம. கோபாலன் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார் கி.வீரமணி. அண்டை நாடுகளுடன் வம்பு இழுக்ககூடாது என்று எச்சரிக்கை கொடுத்துள்ளார்.


‘‘இழந்த நிலங்களை மீட்கும் வகையில், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை மீண்டும் இந்தியாவுடன் இணைக்க வேண்டும்; இந்தியாவை இந்து நாடு என்று அறிவிக்கவேண்டும்‘’ என்று இராம.கோபாலன் பேசியுள்ளார். இதைவிட நாட்டின் அமைதியைக் குலைக்கத் தூண்டும் பேச்சு வேறு இருக்க முடியுமா? உலக அரங்கில் இந்தக் கருத்து எட்டுமானால் அந்த நாடுகள் அண்டை நாடான நம் நாட்டின்மீது நல்லெண்ணத்துடன் உறவு கொள்ள முடியுமா?

‘அகண்ட இந்துஸ்தானமே’ எங்கள் கொள்கை என்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஒவ்வொரு ஆண்டும் கோட்சேவின் அஸ்திமுன் சபதம் ஏற்பதை இப்போது வெளிப்படையாகப் பிரகடனம் செய்வது - நாட்டின் பாதுகாப்புக்கு, வெளியுறவுக் கொள்கை, இறையாண்மைக்கு உகந்ததா? இதனை ஆளுங்கட்சி உடனடியாக மறுக்கவேண்டாமா? கண் ஜாடை காட்டி மகிழ்வதைப்போல இருக்கலாமா?

பன்மதங்கள், பல கலாச்சாரங்கள், பல மொழிகள் உள்ள நாட்டில், ஒருபுறத்தில், ‘‘வேற்றுமையில் ஒற்றுமை’’ (‘ஹிஸீவீtஹ் வீஸீ ஞிவீஸ்மீக்ஷீsவீtஹ்’) பேசிக் கொண்டு இத்தகைய பேச்சுகளையும் ரசித்துக் கொண்டிருப்பதுதான் மத்திய அரசின் அணுகுமுறையா?

இந்து நாடு இது; இதையே இந்து நாடு என்று அறிவிக்கவேண்டும் என்று முழங்கும் இராம.கோபாலன்களுக்கும், மோகன் பகவத்துகளுக்கும் நம்முடைய கேள்வி -இந்திய அரசமைப்புச் சட்டம் இதை அனுமதிக்கிறதா? ‘‘அரசமைப்புச் சட்டத்தைக் கடைப்பிடிப்போம்; காப்பாற்றுவோம்‘’ என்று பதவிப் பிரமாணம் எடுத்த பிரதமர், உள்துறை அமைச்சர், அதற்கு மேல் குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் - இவர்களுக்கு இக்கருத்து உடன்பாடானதா?

இது அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தையே வீழ்த்துவதல்லவா? என்ன பதில்? ‘இந்து’ நாடு என்று அழைக்கவேண்டும் என்று கூறும் இந்துத்துவாவாதிகளான பெருமக்களே, வேதங்கள், உபநிஷதங்கள், பகவத் கீதை, மனுஸ்மிருதி மற்றும் புராண, இதிகாசங்கள் இவற்றில் எதிலாவது உங்கள் மதத்திற்கு ‘இந்து’ என்ற பெயர் உண்டா? காட்ட முடியுமா?

அந்நியர்கள் கொடுத்த பெயர் என்று காஞ்சி சங்கராச்சாரியார் கூறுகிறாரே, ‘இந்து’ என்ற சொல் எந்த மொழி? இந்திய மொழிச் சொல்லா? என்று பதில் கூறுவீர்களா? இந்து மதம் என்ற பெயரே அந்நியன் கொடுத்தது; வெள்ளைக்காரன் வெளியில் இருக்கிறவன் நமக்குக் கொடுத்தது அந்தப் பெயர். நமக்கு ஒரிஜினலாக இருந்த பெயர் பிராமண மதம், சனாதன மதம் என்பதுதான் என்று கொந்தளித்திருக்கிறார்.