”இந்துத்துவ அமைப்புகளின் 7 பொய்த்தாக்குதல் புனைவுகள்” - விவரிக்கிறார் வீரமணி!

குற்றங்களைத் தாங்களே செய்துவிட்டு பிறர் மீது பழிசுமத்துவதில் இந்து முன்னணி போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.


   திராவிடர் கழகத் தலைவர் வீரமணி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ” காந்தியாரைச் சுட்டுக்கொன்றவர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்றால், இல்லை, இல்லை, அவர் ஆர்.எஸ்.எஸ்.காரர் அல்ல என்று சாதிக்க முற்படுவதில்லையா? இப்போது பி.ஜே.பி. சங் பரிவார்களிடையே அமைப்புகளில், பதவிகளைப் பெறுவதற்கு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். தங்கள் அமைப்புகளின் அனுதாபத்தைப் பெறுவதற்கும், பொதுமக்கள் மத்தியில் பிரபல்யம் அடைவதற்கும் சில தந்திரமான வேலைகளில் ஈடுபடுவது அம்பலத்துக்கு, வெளிச்சத்துக்கு அதிகாரப்பூர்வமாகவே வெளிவந்துவிட்டது.” எனக் குறிப்பிட்டுள்ளதுடன், இப்படியான ஏழு நிகழ்வுகளையும் அவர் விவரித்துள்ளார். 

அந்த அறிக்கை விவரம்: 

           திருப்பூரில் என்ன நடந்தது?

1. திருப்பூரைச் சேர்ந்த - இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த நந்து என்பவர் காவல்துறையில் புகார் ஒன்றைக் கொடுத்தார். தனது எலக்ட்ரிக் கடையை மூடிவிட்டு வீடு திரும்பும்போது தம்மை இசுலாமியர்கள் தாக்கியதாகவும், தாக்கியபோது, ‘அல்லாஹ் அக்பர்’ என்று கோஷம் போட்டுத் தாக்கியதாகவும், தங்களை இந்து என்று ஏமாற்றிட அவர்கள் காவி வேட்டி கட்டியிருந்ததாகவும் அந்தப் புகாரில் கூறப்பட்டு இருந்தது. விசாரணை நடத்தியது காவல்துறை - இந்த ஆசாமி நடத்தியது, கபட நாடகம் என்பது அம்பலத்துக்கு வந்தது.

தாம் சேர்ந்த இந்து மக்கள் கட்சியில் செல்வாக்குப் பெறுவதற்காக தம்மை நந்து கத்தியால் கிழிக்கக் கூறியதாகவும், அவ்வாறு தான் செய்ததாகவும் நந்துவின் ஓட்டுநர் இராமமூர்த்தி காவல்துறையிடம் உண்மையைக் கக்கிவிட்டார்.

          அதவத்தூரில் நடந்தது என்ன?

2. திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், அதவத்தூரில் ஒரு நாடகம்; அக்கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் என்பவர் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டட ஒப்பந்தக்காரர் பணியிலும் ஈடுபட்டு வருபவர். ஆறு மாதங்களுக்குமுன் இந்து முன்னணி அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். மூன்று மாதங்களுக்குமுன் இந்து முன்னணியின் அதவத்தூர் ஒன்றிய செயலாளராகவும் ஆனார். 

5.3.2020 இரவு 2 மணியளவில் அவர் திருச்சி - சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். தனது வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது மோட்டார் வாகனத்திற்கு யாரோ சிலர் தீ வைத்துவிட்டனர் என்பதுதான் அந்தப் புகார். அப்படி தீ வைத்தவர்கள் இந்து மதத்துக்கு எதிராகக் கோஷமிட்டனர் என்றும் அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது.

புகார் கொடுத்ததோடு சில இந்து முன்னணி நண்பர்களை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியுள்ளனர்.

கண்காணிப்புக் கேமரா காட்சிகளைப் பார்த்தபோது குட்டு அம்பலமானது.

புகார் கொடுத்த சக்திவேல், அவரது கூட்டாளியான மற்றொரு சக்திவேல், முகேஷ் ஆகியோர் இணைந்தே பெட்ரோல் வாங்கி வந்து மோட்டார் பைக்கைக் கொளுத்தியது அம்பலத்துக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து சக்திவேல் உள்பட மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்து முன்னணி வகையறாக்களின் இத்தகைய இழிவான, தந்திரமான செயல்பாடுகள் என்பது புதியன அல்ல; இது மாதிரியான கபட நாடகங்களை இதற்கு முன்பும் அரங்கேற்றியும் உள்ளனர்.

           சத்தியமங்கலத்தில் சதி!

3. தமிழ்நாட்டில் சத்தியமங்கலத்தை அடுத்த சதுமுகை என்ற ஊரில் விநாயகன் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டு இருந்தது. இன்னொரு சாமியின் சிலை கீழே தள்ளப்பட்டு இருந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்தபோது, அதைச் செய்தவர்கள் அவ்வூரைச் சேர்ந்த மஞ்சநாதன் (வயது 17), செல்வக்குமார் (வயது 23) ஆகியோர் என்றும், அவர்கள் இருவரும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள்; திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்மீது பழியைப் போடுவதுதான் அவர்களின் நோக்கம் என்ற குட்டு உடைபட்டது.  

              தென்காசியில் ‘அரங்கேற்றம்!’

4. திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் 2006 ஜனவரி 24 ஆம் தேதியில் நகர இந்து முன்னணியின் தலைவர் குமார் பாண்டியன் தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலை தொடர்பாக மூன்று முசுலிம்கள் கைது செய்யப்பட்டனர். மதக் கலவரம் ஏற்பட்டு முசுலிம்களின் கடைகளும், வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டன. அதன் பின்னணியில் இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வெடிப்பும் நடந்தது. அது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஏழு பேர்களும் இந்து முன்னணியினரே!

          குமார் பாண்டியன் கொலை செய்யப்பட்டபோது பெரிய அளவில் மதக் கலவரம் ஏற்படாததால், இந்தக் காரியத்தைச் செய்து, (இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வெடிப்பு) அதன்மூலம் பெரிய அளவு கலவரத்தைத் தூண்டவேண்டும் என்பதுதான் தங்கள் நோக்கம் என்று கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்தார்களே!

             கடையநல்லூரைச் சேர்ந்த சிவா என்ற சிவானந்தம் தமிழக இந்து முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆவார். கேரளாவில் கல்குவாரியில் பணி செய்தவர். பாறைகளை உடைக்கப் பயன்படுத்தும் அமோனியம் நைட்ரேட்டை வெடிகுண்டு தயாரிப்பதற்காக கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

             கோபி அருகே ஒரு ‘நாடகம்‘

5. ஈரோடு மாவட்டம் கோபி அருகே ஒரு சம்பவம் - கணபதிபாளையத்தைச் சேர்ந்த ராஜகுரு (வயது 31) இந்து அதிரடிப்படை மாநிலப் பொதுச்செயலாளர். காவல்துறையில் புகார் ஒன்றைக் கொடுத்தார் அவர்.

             1.10.2016 அன்று இரவு குல்லா அணிந்த நான்கு பேர் தன்னைக் கொலை செய்ய கத்தியுடன் துரத்தி வந்ததாக கோபி காவல்துறையிடம் பரபரப்பான புகாரைக் கொடுத்தார். 

காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியபோது - அது ஒரு கபட நாடகம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவரே தனது ஸ்கூட்டருக்குத் தீ வைத்துக்கொண்ட கதையும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து ராஜகுரு கைது செய்யப்பட்டார். 

          ”சம்பவத்தன்று ஸ்கூட்டரை எரித்துவிட்டு, எரிந்து கொண்டிருந்த ஸ்கூட்டரை அவரே கைப்பேசியில் படம் பிடித்துள்ளார். அவரை மர்ம நபர்கள் துரத்தியபோது, வாய்க்காலில் குதித்துத் தப்பி ஓடியதாகக் கூறியிருந்தார். அவரது கைப்பேசியை சோதனை செய்தபோது, ஸ்கூட்டர் எரிந்து கொண்டிருந்ததை 20 நிமிடங்கள் வரை படம் பிடித்திருக்கிறார்” என்று காவல்துறை மாவட்டக் கண்காணிப்பாளர் சிவகுமார் கூறியுள்ளார்.

            தென்காசியில் இன்னொரு சம்பவம்!

6. தென்காசி குளத்தூரான் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இந்து முன்னணியின் முன்னாள் நிர்வாகி. பிறகு ‘பாரத் சேனா’ என்ற இந்து அமைப்பின் தலைவர். 2017 ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு தனது வீட்டின்முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை யாரோ தீ வைத்துவிட்டனர் என்று புகார் கூறினார். நள்ளிரவில் பட்டாசு வெடித்ததுபோல சத்தம் கேட்டதாகவும் கூறினார். விசாரணை செய்தபோது, அந்த நபரே அதைச் செய்தார் என்பது தெரிய வந்தது. காவல்துறையினர் அவரை எச்சரித்து அனுப்பினார்கள்.

             சோழபுரத்திலும் சோடனை!

7. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரைச் சேர்ந்த காளிகுமார் இந்து மக்கள் கட்சியின் துணை அமைப்பான அனுமான் சேனையின் மாநில செயலாளர். அவர் காரில் சென்றபோது, சோழபுரம் சுங்கச்சாவடி அருகே அடையாளம் தெரியாத ஒரு கும்பல் காரை வழிமறித்து பெட்ரோல் குண்டு வீசியது என்றும், அதில் கார் தீப்பற்றி எரிவதாகவும் காவல்துறைக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவலும் தெரிவித்தார்.

               விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர், அவர் புகார் பொய்யானது, மோசடியானது, இட்டுக்கட்டப்பட்டது என்று கண்டறிந்து, காளிகுமார் உள்பட மூன்று பேரையும் கைது செய்தது.

               மதத்தால் மாறுபட்டு இருந்தாலும், சக மனிதரிடத்தில் சகோதரத்துவமாகப் பழகக் கூடாது, வெறுக்கவேண்டும்; எதையும் மதப்பார்வையோடு பார்க்கவேண்டும் - அதற்காக எந்த எல்லைக்கும் சென்று கபட நாடகம் ஆடுவது - பழியை பிறர்மேல் போடுவது - அந்த நாடகம்கூட ஒரே மாதிரியான சோடனை என்பதையும் கவனிக்கத் தவறக்கூடாது. இவைதான் இந்தச் செயல்களில் ஈடுபட்டவர்களின் மனப்பான்மை.

               2008 இல் மாலேகான் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாக குற்றம் சுமத்தப்பட்டவர் ‘அபிநவ் பாரத்’ அமைப்பைச் சேர்ந்த ஒரு பெண்மணி பிரக்யாசிங் தாகூர். இந்தக் குண்டுவெடிப்பில் இராணுவத்தில் பயன்படுத்தப்படும் துப்பாக்கி மருந்து பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிரக்யாசிங் தாகூர் பிணையில் வந்து, எம்.பி.,யாகி காந்தியார் கொலையை நியாயப்படுத்தி, இந்திய நாடாளுமன்றத்திலேயே பேசி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பலத்த கண்டனத்திற்கு ஆளான நிகழ்வு, அண்மைய வரலாறு அல்லவா?” என்று வீரமணி விவரித்துள்ளார்.