தமிழ்நாடு மட்டும் மற்ற மாநிலத்தவரின் வேட்டைக்காடா? வீரமணி போராட்ட அறிவிப்பு.

மற்ற மாநிலங்களில் வேலை வாய்ப்பு அந்தந்த மாநிலத்தவர்க்கே என்ற நிலையில், தமிழ்நாடு மட்டும் மற்ற மாநிலத்தவரின் வேட்டைக்காடா? தமிழ்நாடு அரசு உறக்கம் கலையட்டும் - இல்லையெனில் ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்து கடும் போராட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தமிழ்நாடு பெயரளவில்தான் ‘தமிழ்நாடாக’ இருக்கிறது இன்றைய ஆட்சியின்கீழ்; நடைமுறையில் பிற மாநிலத்தவரின் வேட்டைக்காடாகவும், பண்பாட்டுப் படையெடுப்பை பிற இனத்தவரும், மொழியாளரும் - செம்மொழி தமிழைப் புறந்தள்ளி அதற்குரிய முக்கியத்துவத்தையும் தராது ஹிந்தி, சமஸ்கிருத கலாச்சாரத் திணிப்பைச் செய்து வருகின்றனர்;

தமிழ்நாடு அரசு இதனைக் கண்டும் காணாததுபோல் இருப்பதோடு, கடுமையான தனது எதிர்ப்பை மத்திய அரசிடம் வைத்து, மாநில உரிமைகளைக் காப்பதற்கு எந்தவித முயற்சியையும் எடுக்காத ஒரு பொம்மை அரசாகவே நீடிப்பது மிகவும் வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியதாகும்.

தமிழ்நாட்டு அரசின் முக்கிய துறைகளிலும், அலுவலகங்களிலும் தமிழ்நாட்டு மக்கள், உள்ளூர் மக்கள் அறவே புறக்கணிக்கப்பட்டு, பிற மாநிலத்தவரின் வேட்டைக்காடாகவும், ஆதிக்கம் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக பெருகிடும் பேரபாயம் வளர்ந்துகொண்டே போகிறது!

தடுத்து நிறுத்திட தற்போதைய தமிழ்நாடு அரசு எந்த முயற்சியையும் எடுப்பதாகத் தெரியவில்லை. நிலைமை எந்த அளவுக்கு கீழிறக்கத்திற்குச் சென்று விட்டது என்பதற்கு எடுத்துக்காட்டு - சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உயர்நீதிமன்றப் பிரிவில் ஒரு வழக்கை விசாரித்துள்ள நீதிபதிகளின் அமர்வே மிகுந்த வேதனையுடன் இதனை சுட்டிக்காட்டியுள்ளது.

 ‘‘பிற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் பணி வழங்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் பிற மாநிலத்தவர்களை அதிக அளவில் அரசு பணிகளில் நியமிப்பது ஏன்?’’ என்ற நியாயமான கேள்வியை நீதிபதிகள் எழுப்பியுள்ளனர். அதோடு,வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களின் தாய்மொழியான ஹிந்தியில் தேர்ச்சி பெற இயலாத நிலையில், தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, பணி நியமனம் பெறுவது எப்படி? அரசின் கொள்கை முடிவு என்று ஏமாற்றுகிறார்கள்.

பணித் தேர்வுகள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெறவேண்டும். ரயில்வே தேர்வில் அதிக அளவு மோசடி நடைபெறுகிறது. தமிழகத்தில் மின் வாரியம், ரயில்வே என பல்வேறு துறைகளில் பிற மாநிலத்தவர்கள் அதிக அளவில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்‘’ என்று ஆணி அடித்ததுபோல, தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டியுள்ளதோடு, மற்றொரு கேள்வியையும் விசாரணையின்போது எழுப்பியுள்ளனர்!

கருநாடக (பி.ஜே.பி.) அரசில், ‘‘80 சதவிகித பணிகள் உள்ளூர்வாசிகளுக்கே!’’ (கன்னடியர்களுக்கே) என்று சட்டமும் இயற்றி பிரகடனப்படுத்தியுள்ளது. அதுபோல, மத்திய பிரதேச (பா.ஜ.க.) அரசும் தனிச் சட்டமே இயற்றப் போகிறோம் என்று கூறுகிறது. ஏற்கெனவே சிவசேனை மராத்திய அரசு நடைமுறையில் அதனை செய்துவரும் நிலையில், தமிழ்நாடு இப்படி நாதியில்லாத ஒரு மாநிலமாக, நம் பிள்ளைகள், இளைஞர்கள் வேலை கிட்டாமல் தற்கொலை செய்துகொண்டு மாளும் நிலையில், இப்படி பிற மாநிலத்தவரின் பகற்கொள்ளையா? இதற்கொரு முற்றுப்புள்ளி சட்ட ரீதியாகத் தமிழ்நாடு அரசு வைக்கவேண்டும்.

தமிழ்நாடு அரசின் உறக்கம் கலையட்டும். இதனை வலியுறுத்தி திராவிடர்கழகம் நாடு தழுவிய அறப்போரை, ஒத்தக் கருத்துள்ளவர்களையும், இளைஞர்களையும் திரட்டி நடத்திடவும் தயங்காது என்று தெரிவித்துள்ளார்.